ஊழிக்கூத்து – உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

chamunda

கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று பாரதியின் பல படைப்புகள் அவனின் கவித்திறனை பறைசாற்றிய போதும், தனிப் பாடலாக உச்சத்தைத் தொட்ட கவிதைகளுள் அவனின் ஊழிக்கூத்து சிகரமாக நிற்கின்றது.

ஆழ்ந்த பொருளுள்ள பாரதியின் கவிதைகளில் ‘ஊழிக்கூத்து’ மிகவும் தனித்துவமிக்கது.

தெய்வப் பாடல்கள் என்ற பகுப்பில் இக்கவிதையைச் சேர்த்திருப்பது எத்தனை தூரம் பொருந்தும் என்பதை இக்கவிதையை படித்துணர்ந்தவர்களின் முடிவிற்கே விட்டு விடுதல் நன்று.

இப்பாடலின் உட்பொருளாகி ஆடும் அன்னை பிரபஞ்ச சக்திகளின் மூலம். மூலசக்தி!

அவள் மகாசக்தி!

பாரதி போற்றிய கடவுள் கருத்துகளில் சக்திக்கே முக்கிய இடத்தினைக் கொடுத்தார். சக்தியே எங்கும் நிறைந்திருந்ததாயக் கண்டார்.

தனது வசனக் கவிதையில் சக்தியை

அநந்தம், எல்லையற்றது முடிவற்றது…
பிணைப்பது, கலப்பது…
புடைப்பது.. வீசுவது..
ஒன்றாகுவது, பலவாக்குவது..
கொல்வது, உயிர் தருவது…
சக்தி முதற்பொருள்…

”சொல்லுக்கடங்காவே – பராசக்தி” என்றொரு பாடலில் மொழிகிறான்.

காட்டு வழிகளிலே-மலைக்
காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சில
வேட்டுவர் சார்பினிலே-சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள்வருவாள் – அம்மா

அம்மா என்று அழைப்பதற்கும் அன்னை என்று அழைப்பதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. அம்மா என்ற அழைப்பில் ஒரு நெருக்கம் உண்டு. அன்னை என்று விளித்து நோக்கும் போது அவளையே சற்று தூரத்தில் வைத்து, அவளை, அவளின் சக்தியை நிமிர்ந்து பார்த்து, பிரமித்து மரியாதையோடு அழைப்பது போல.

இங்கு, அண்டவெளியின் சக்தியை அன்னை என்று அழைக்கின்றான் பாரதி.

ஊழிக்கூத்து கவிதை காலத்தோடு நிர்மூலம் ஆகும் மூவுலகின் அழிவை, அதன் ஆட்டத்தை அழகியலோடு பேசுகிறது.

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட – வெறும்
வெளியி லிரத்தக் களியோடு பூதம் பாட

வெறும் வெளி – பிரபஞ்சம். பூதம் என்பது சக்தியின் (Sprit / Energy) வடிவம். பெரும் மோதல்கள் எழுந்து அனைத்தும் சிதறிப் போகும் சக்திகளின் கூத்தில் இடிகள் எழுகின்றன. அவை தாளத்தோடு அசைகின்றன.

பிரபஞ்சத்தில் காணும் சக்திகளின் இயங்கு விசைகளின் வேகத்தைக் காட்சிப்படுத்தும் பாடல் வரிகளின் பொருள் யாவும் சக்தியே.

ஒன்று மற்றொரு வடிவமாகக் பரிணமிக்கும் சக்தி, இக் கவிதையில் ஒரு பேயுருவினைப் போல காட்சிப்படுத்தப்படுகிறது.

பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் – களித்
தாடுங் காளீ, சாமுண்டீ, கங்காளீ!

தனது சதைகளைப் பிய்த்தெறிந்து எலும்புக் கூடாகத் திரியும் காளியின் பேய் வடிவமே கங்காளி.

கறுத்த நிறத்தில் தோற்றங் காட்டுவாள் சாமுண்டி. இங்கு இவள் பிரபஞ்சத்தின் இருளினைச் சுட்டி நிற்கின்றாள். பிணங்களின் மீது அமர்ந்திருக்கும் சப்த கன்னியர்களில் ஒரு தெய்வமாகும். இவரை சாமுண்டீஸ்வரி என்றும் அழைக்கின்றனர். இவர் துர்க்கா தேவி போரில் ஈடுபடும் போது அவருடைய படையில் ஒருவராக கருதப்படும் சக்தி வடிவம்.

சக்தியிலிருந்தே ஒலி எழுகின்றது, சக்தியிலிருந்தே ஒளி எழுகின்றது. பின் அந்தச் சக்தியினூடாகத் தானும் இயைந்து கூடுகின்றது. பிரபஞ்சத்தில் பிளவுபடும் சக்திகளின் மேலிருந்து இயக்கும், இயங்கும் சக்தியின் வடிவமாகவும் இவளே இருக்கின்றாள்.

இதை தனது வசனக் கவிதையில் வேறுசில சொற்களால் இப்படிக் கூறுகின்றான்

சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்…

….

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப் – பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக

ஐந்து பூதங்களுமே சக்தியினுடைய வேறு வேறு வடிவங்கள். நிலம் – திண்மம். இந்தத் திண்மத்தை நாம் பிரித்துக் கொண்டு போனால் இறுதியில் மிஞ்சுவது அணு. அணு சக்தியின் வடிவம். அணு இணைந்தாலும் சிதைந்தாலும் சக்தியின் வடிவமே.

நீரைப் பிரித்துக்கொண்டு போனாலும் இறுதியில் வருவது அணு தான். தீயும் சக்தியின் வடிவமே. காற்றும், ஆகாசமும் அதிலிருக்கும் அனைத்தும் அணுக்கள் தான்.

ஆகாசம் ஏன் நீல நிறமாகத் தெரிகின்றது என்று நம்மில் எத்தனை பேர் சிந்தித்திருப்போம்?

பூமிக்கு வெளியில் இருந்து பூமிக்கு கதிர் வீச்சுக்கள் வருகின்றன. அந்தக் கதிர் வீச்சுக்களில் இருக்கின்ற Ultra violet என்னும் உயிர்களுக்கு ஆபத்துத் தருகின்ற கதிர்வீச்சுகளும் இருக்கின்றன. அவை பூமிக்கு வராதபடி ஆகாயத்தில் இருக்கின்ற அணுத் துணிக்கைகள் (Gas molecules) தடுக்கின்றன. தடுத்து நிறுத்தும் பொழுது Ultra violet நிறத்தை ஆகாயத்து அணுத் துணிக்கைகள் தமக்குள் எடுத்துக் கொள்கின்றன.

இந்த அணுத் துணிக்கைகளின் மோதல் நிகழ்வுகளின் காரணமாகத் தான் நமக்கு ஆகாயம் நீல நிறமாகத் தெரிகிறது. இம்மோதல்கள் இரு சக்திகளின் கூத்தின்றி வேறென்ன?

சக்தியாக விளங்கும் ஐம்பூதங்கள் அழியும் போதிலும் அவை மீண்டும் அணுவாகி சக்தியின் வேறெரு வடிவமாகி விடுகின்றன.

பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு என்பதும் அவனுடைய வரிகளே.

அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் – தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்,

ஒளியின் வேகத்தோடு சேர்ந்து ஒருவர் சிந்திக்கும் வேகமும் சேரும் போது கிடைக்கும் வேகத்தோடு இணைந்து சக்திகளின் இயக்கம் பிரபஞ்சம் முழுவதும் நடைபெறுகின்றது. இந்த வேகத்தில் சக்திகள் மோதுண்டு சிதறும் காட்சிகள் பெருந் தீப்பிளம்பின் நடனமாக பாரதியின் மனக் கண்ணில் விரிகிறது.

சூரியனின் நெருப்பாகவும் தீப்பிளம்புகளாகவும் ஆகி அடுதீ சொரிகின்றது.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச் – சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய

சலனம் என்பது இயக்கம். குலம் என்ற சொல்லின் மூலக் கருத்து கூட்டம். சக்தியினுடைய Genetic form. சக்தி இரண்டு வடிவங்களில் உள. அவையாவன நிலைவிசை மற்றும் இயங்குவிசை. இங்கே குறிப்பிடப்படுவது இயங்கு விசை.

அண்டவெளியில் பல இயங்கு விசைகள் இருக்கின்றன. இவை எல்லாம் தாம் இருக்கின்ற நிலைகளிலிருந்தும் வழிகளிலிருந்தும் கலைகின்றன, வடிங்கள் மாறுகின்றன.

அங்கே
ஊழாம் பேய்தான் “ஓஹோ ஹோ” வென்றலைய, – வெறித்
துறுமித் திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்,

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச் – சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி

பெரும் யுத்தம் நடைபெறும் இடத்தில் பேயினைப் போல் எங்கும் அழிவின் ஆட்டம் தொடர்கிறது. அழிவே தானாக, காணும் திசையெங்கும் சக்தி தன்னைத் தானே எரித்து மற்றோர் சக்தியாக மாறி மாறி இயங்கி இயக்குகிறது.

இவை எல்லாம் தானே தான் என்று மூலசக்தி அங்கே ஆடும் கூத்தே செருவங்கூத்து. செருவெங்கூத்தென்பது வன்மம் நிறைந்த யுத்தத்தைக் குறிப்பது.
இதன் தொடர்ச்சியாக சக்திக் கூட்டங்கள் தம் தலைகளை ஒன்றோடொன்று முட்டி மோதி தாளத்தோடு உடைந்து சிதறுகின்றன.

அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல்போய் எட்டித் – தானே
எரியுங் கோலங் கண்டேசாகும் காலம்

சிந்தனையை நிறுத்திவிடும் பயங்கரக் காட்சிகளாக சக்தியினுடைய கண்களில் இருந்து புறப்பட்ட தீயில் தானே எரிந்து சாகும் காலமும் உண்டென்கிறது. மூலசக்தியினுடைய வடிவத்திற்குள் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அடங்கி விடுகின்றன.

காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் – அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-

சக்திக் கலைகளிலே ஒளி யொன்று.. மூன்று உலகங்களும் பிரபஞ்சத்திற்கு உட்பட்டதே. அவை சொர்க்கம், மத்தியமம், பாதாளம் என்பன. இவை மூன்றும் காலத்தின் போக்கில் ஒன்றோடென்று மோதி அழிந்து போகுமளவு சக்தியின் கூத்து நடைபெற்று முடிகிறது. முடியும் காலம் மோனத்து ஒளியுண்டாகும். அது அமைதியின் ஒளி!

இயற்பியலின் (physics) உச்ச நிலை என்பது இதுவே.

இயற்பியலின் உச்ச நிலை என்பது திண்ம சக்திக்கும் ஒரு எதிர்சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதே ஆகும். இதுவே இயற்பியலின் கடைநிலை எனப்படுகின்றது.

இங்கு மோனத்து ஒளி என்பது பிரபஞ்சத்தின் மற்றொரு சக்தி வடிவு (Anti Matter).

சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் – கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக்கூத் திடுவாய்,

பிரபஞ்சத்தின் மற்றொரு பகுதியாக இருப்பது கருந்துளை (black hole). மோனத்து ஒளியை இங்கே சிவன் வடிவில் எடுத்து வருகிறான் பாரதி. சிவன் என்பது அழிவிற்கான குறியீடு. மோனத்து ஒளியுள் போய் சக்தி ஒன்றாகுதல் என்பது இயற்பியலின் உச்ச நிலை.

தனக்கு உட்பட்ட எந்த சக்தியும், ஒளியையும் கூட உள்ளிழுத்து வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சக்தியைக் கொண்டது கருந்துளை. அது முடிவிலியானது.

அழிவென்பது இங்கு இயைவாகிறது.

பிரபஞ்சக் கூத்தினை காட்சிகளாகக் கண்டவனின் பரவசநிலை கவிதையாக உருப்பெற, அதனை அற்புதச் சித்திரமாக நாமும் கண்டுணர்கின்றோம்.

இறப்பையும் கொஞ்சித் தொடுவாய், ஆனந்தக் கூத்திடுவாய் என்று பிரபஞ்சக் கூத்தினை உணர்ந்த பாரதி தன் நிலையில் இருந்து சொல்கிறான் – ‘அன்னை… அன்னை.. ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை’!

ஊழிக்கூத்து, உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

960x0

chamunda

363px-Chamunda_British_Museum

Chamunda British Museum Orissa, 8th – 9th century AD. India.

One thought on “ஊழிக்கூத்து – உணர்ந்தார்க்குப் பேரனுபவம்!

  1. பிங்குபாக்: Preikestolen – Stavanger, Norway |

பின்னூட்டமொன்றை இடுக