மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்லும் தொல்காப்பியம்
(தொல்காப்பியம் – பொருளதிகாரம் – களவியல்)
களவு என்பதின் வினை அடி கள்ளுதல்.
கள்ளுதல் – கவருதல்.
ஒருவருடைய உயிரை இன்னொருவர் கவருதல். (களவாடுதல், களவு செய்தல் எனும் பொருள்படும்.)
இரண்டு அகங்கள் சேருகின்ற அகச் சேர்க்கையின் மனம் புணர் உணர்வே களவியல்.
”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.
திருக்குறள் கூறும் ”அறம் – பொருள் – இன்பம்” தொல்காப்பியத்தில் ”இன்பம் – பொருள் – அறம்” என்று இன்பத்தை முன்னிலைப்படுத்தி வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவை அன்பின் ஐந்திணை என்று சொல்லப்படும் ஐந்து திணைகளோடும் விளக்கப்பட்டிருக்கிறது.
பிராமண மரபில் உள்ள எட்டுவிதமான திருமண வகைகளில் இறுதியான ஒன்று மட்டுமே களவியல் (காதல்) பற்றியது. பிராமண மரபில் குறிப்படப்படும் எட்டும் (களவியல் தவிர்த்து) அன்பினால் வருகின்ற கூடல் அல்ல என்பதையும் மேற்தந்த சூத்திரம் எடுத்துரைக்கின்றது. ஆனால் தமிழர் வாழ்வியல் காதல் திருமணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது.
“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே”.
அன்பின் ஐந்திணையில் வரும் ஆண் – பெண் தொடர்பாடல் பற்றித் தொல்காப்பியம் கூறும் விடயம் மிக அழகானதும் மிக ஆழமானதும் கூட.
தலைவனும் தலைவியும் முதன் முதலில் காணும் போது மனம் லயித்து நிற்கும் ஒரு கணப் பொழுதில், அவர்கள் தான் என்னும் தன்மையை இழக்கிறார்கள். மனித வாழ்க்கையில் அந்த ஒரு கணம் காதலின் நனியுயர் கணமாகச் சொல்லப்படுகிறது.
எல்லாவற்றையும் இருமையாகவே (Binary) பார்த்து விளங்கிக் கொள்கின்ற மனித மனங்களாலான இந்த உலகத்தில், எல்லாம் கடந்து நிற்கும் ஒரு பொருளினால் தான் இரு மனங்கள் லயித்து நிற்கும் அந்த ஒரு கணம் நிகழ்வதாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.
மேலும் அவர் கூறும் அந்தப் பொருளுக்கு (ஒன்றி உயர்ந்த பால்) கடவுள் என்றோ இயற்கை என்றோ அல்லது விதியென்றோ ஒரு பெயரும் குறிப்பிடாமல் கடந்து போவது தனிச்சிறப்பு.
“சிறந்துழி ஐயஞ் சிறந்த தென்ப
இழிந்துவழி இழிவே சுட்ட லான”
தன்னுணர்வற்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் இக்காட்சி (ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப) ஒரு கணம்தான். இந்தக் கணம் முடிந்த பின்னே சுய உணர்வு பெறும் போது அவ் அனுபவமும் போய்விடுகிறது. அனுபவம் போன பின்னாலே மனதைக் கவர்ந்தவர் யார் என்ற ஐயமும் வியப்பும் ஒருங்கே தோன்றுகிறது என்கிறார் தொல்காப்பியர்.
தாம் ஈடுபட்ட அந்த ஒரு கணயீர்ப்புப் பொழுதானது நனியுயர் நிகழ்வாக இருக்கும் போது ஒருவரை ஒருவர் நினைத்து வியக்கின்றதாகவே இருக்கும் என்கிறார். ஆணோ பெண்ணோ தாம் சந்தித்த ஒருவரை ஒரு மேன்மையான உயிராகப் பார்ப்பது மற்றும் வியப்பது காதலில் உயர்ந்தது என இங்கு சொல்லப்படுகிறது.
தான் கண்ட நபர் தன்னிலும் மேலான ஒருவர் என்ற வியப்பு ஏற்படாத பட்சத்தில் கொள்ளும் ஈர்ப்பு இழிந்தது (கவர்ந்து கொண்டு போகும் பொருள் என்ற எண்ணம்) என்றே தொல்காப்பியம் உரைக்கிறது.
மனித உறவுகளுக்கு நுண்மையையும் மேன்மையையும் நுட்பமாக சொல்லிக் கொடுக்கும் தமிழர் வாழ்வியல், தன்னிலும் மேலனவர் என வியக்கும் ஒருவர் மீது கொள்ளும் காதலே மேன்மையானது என்று கொண்டாடுகிறது.
மனித சிந்தனை ஓட்டத்தின் அடிநாதத்தை கொண்டு வந்திருப்பது மட்டுமில்லாமல் மனித மனதின் மூலங்களை நுட்பமாகத் தொட்டுச்செல்கிறது தொல்காப்பியம்.
———————————-
இலக்கிய வகுப்பிலிருந்து
02.12.2019









