Sigrid undset – நோர்வே நாட்டில் நோபல் பரிசு பெற்ற பெண் எழுத்தாளர்

20376046_10213982781994226_4053174718524245521_nSigrid undset –நோர்வே நாட்டில் இலக்கியத்துறையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களில் பெண் எழுத்தாளர் சிக்றிட் உன்செத். அவர் வாழ்ந்த இல்லம் அருங்காட்சியமாக பேணப்பட்டுவருகிறது. வீட்டினை சுற்றி சிற்றோடை, பூங்கா மட்டுமல்ல ஒரு பகுதியை அப்படியே காட்டுப்பகுதியாகவே விட்டு வைத்திருக்கிறார். அவருடைய அழகியல் உணர்வு வீடுமுழுதும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு அறையிலும் புத்தகத்தட்டுக்கள், புத்தகங்கள் மட்டும் தோராயமாக பத்தாயிரம் என அறியக்கிடைத்தது. தொன்மைவாய்ந்த தளபாடங்களின் மேல் அவருக்குப் பெருவிருப்பு இருந்திருக்கிறது. மிகநுணுக்கமாண வேலைப்பாடுகளை தன் இல்லம் முழுவதும் கலைத்துவத்தோடு வடிவமைத்திருக்கிறார். ஓவியங்களையும் பழங்காலத்துப் பொருட்களையும் அவர் அவைகளை வைத்திருக்கும் நேர்த்தியும் மிக அழகு. அவரைப்பற்றி பானுபாரதி எழுதிய அறிமுகக்குறிப்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

 

———————–

சிக்றிட் உன்செத்
காலப்பகுதி:- 1882 – 1949

உயிர்மெய்-2 (2006)

டென்மார்க்கில் பிறந்தவர். புதைபொருள் ஆய்வாளரான இவரது தந்தை நோர்வேயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது தாயாரின் பிறப்பிடமான டென்மார்க்கில் இரண்டு வருடங்கள் வாழ்ந்தபின் நோர்வேக்கு குடி பெயர்ந்தனர். சிக்றிட் அவரது தந்தையார் நோயுற்றிருந்த வேளைகளில் தனது அதிகமான நேரத்தை தந்தையுடனே செலவிட்டார். தந்தைக்காக வரலாற்று நூல்களையும், நோர்வேயின் பழைய மதமாகிய நொரொன் (Norrøn) இலக்கியங்களையும், வைக்கிங்காலத்து வரலாற்று நூல்களையும் உரத்து வாசித்தார். அவருக்கு பதினோரு வயதாக இருந்தபோது தந்தையார் இறந்துபோனார். தாயார் அவருக்கு தொடர்ந்து கல்வி பயிற்றுவிக்கத் தயாராக இருந்தபோதும் தந்தை இறந்தபின், அவர்களது குடும்ப பொருளாதார நிலமை மோசமாக இருந்ததால் வர்த்தகக் கல்லூரியில் சேர்ந்து பதினேழு வயதிலேயே ஒரு அலுவலக நிர்வாக வேலையைத் தேடிக் கொண்டார். அலுவலக நிர்வாகத்தில் பத்து வருடங்கள் பணி புரிந்த சிக்றிட்டுக்கு அந்த வேலை மிகவும் சலிப்பூட்டியது. தனது வேலை நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களில் எழுதுவதில் ஈடுபட்டார்.

1907இல் அவரது முதலாவது படைப்பான “திருமதி மார்த்தா ஒலியா” வெளிவந்தது. சிக்றிட் அமாலியாவின் தீவிர வாசகியும் ரசிகையுமாக இருந்தார். கமில்லா, அமாலியா, ஆகியோரது படைப்புக்களின் பாதிப்பு இவரது முதலாவது நாவலான “திருமதி மார்த்தா ஒலிவியா”வில் காணப்படுகின்றது. முதலாவது நாவல் வெளிவந்ததைத் தொடர்ந்து சிக்றிட் முழுநேரப் படைப்பாளியாகிறார். புலமைப்பரிசில் பெற்று இத்தாலியாவுக்குச் சென்றவர் ஓவியர்கள், கலைஞர்கள் போன்றோரது சூழலில் வாழ்கிறார். 27வயதான சிக்றிட் தன்னைவிட 13வயது அதிகமான அன்டர்ஸ் சிவஸ்தாட் என்பவரைச் சந்திக்கின்றார். இருவரும் ஒருவரையொருவர் நேசங் கொள்கின்றனர். அன்டர்ஸ் ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானவர். இருவரும் 1912இல் திமணம் செய்து லண்டனில் குடியேறுகின்றனர். இவர்களது மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த காலப் பகுதியில் சிக்றிட் மகனுடன் தனது தாயாரிடம் வருகின்றார். அவர்களது திருமண வாழ்வு அடிக்கடி ஏற்பட்ட நீண்ட பிரிவுகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. இவர்களுடைய இரண்டாவது மகளும் வலிப்பு நோயினால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தாள். தாயெனும் பாத்திரம் சிக்றிட்டினது வாழ்வில் நடைமுறையிலும் எழுத்திலும் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒரு இலட்சியத்தாயாக அவரால் விளங்க முடியவில்லை. 1919இல் வீட்டு ஒப்பந்தத்தை இழந்த நிலையில் சிக்றிட்டினது கணவர் தனியாகக் குடியேறுகிறார். கணவனும் மனைவியும் வேறு வேறு இடத்தில் வாழ நேர்ந்தமையை குடும்ப வாழ்வின் வீழ்ச்சி என்றே சிக்றிட் கருதினார். இந்த இடைவெளி அவர்களை விவாகரத்து வரையும் கொண்டு சென்றது. 1924இல் “டொமினிக்கன்” கத்தோலிக்க சபையில் சேர்ந்து சகோதரிஒலிவியா எனப் பெயர் மாற்றம் செய்கின்றார். நம்பிக்கை நிறைந்த ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதிலும் சிக்றிட் விவாகரத்துப் பெற்ற காரணத்தினால் முழுமையாக மத நடவடிக்கைகளில் பங்கெடுக்க முடியவில்லை. ஏனெனில் விவாகரத் செய்வதென்பது கடுமையான பாவமாக அன்றைய கத்தோலிக்க திருச்சபையினால் கருதப் பட்டது.

1928இல் ”கிறிஸ்ரின் லவறன்ஸ் டத்தர்” நாவலுக்காக இவருக்கு இலக்கியத்துக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. இந்நாவல் மூன்று தொடர் பகுதிகளைக் கொண்டது. வரலாற்று ஆதாரங்களுடன் வெளிவந்த முதல் யதார்த்தவாத நாவலும் இதுவாகும். (இந்த நாவல் நோர்வேயில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது) இதற்குக் கிடைத்த நிதியில் அரைப்பகுதியை மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிதியத்திற்கு சிக்றிட் வழங்கினார். மிகுதியை ஏழை கத்தோலிக்கர்களுக்கும், எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கினார்.

இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது சுதந்திரமான நோர்வேக்காக பல கட்டுரைகளை எழுதினார். தனது எழுத்துக்களினூடாக நாஸிசத்துக்கெதிரான மிகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார். நோர்வேயின் அன்றைய காலகட்டத்திலிருந்த படைப்பாளிகளுள் நாஸிகளினால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1949 யூன் 10ம் திகதி சிக்றிட் மரணமடைந்தார். சிக்றிட் உன்செத் தனது எழுத்துக்களினூடாக நவீன யதார்த்தவாதியாக அறியப் பட்டவர். தான் வளர்ந்துவந்த சூழலோடு மாறுபட்டு அதிலிருந்து வெளியேறியவர். மத்தியதர வர்க்கத்தினுடைய எழுச்சியினால்த்தான் எல்லா சமூகப்பிரிவினது பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். தனது முதலாவது நாவலான “திருமதி மார்த்தா ஒலியா” வில், மார்த்தா தனது கணவனுக்கு நம்பிக்கையற்ற விதமாக நடந்து கொள்கிறாள். ஆனால் சமூகத்தினது தீர்ப்புக்கு அவள் ஆளாகவில்லை. மாறாக, தன்னைத் தானே தீர்ப்பிடுகின்றாள். தனது நம்பிக்கைத் துரோகத்தைத் தானே நொந்து கொள்கின்றாள். சிக்றிட்டினது கவிதைகளில் பெண்கள் தாமாகவே தவறிழைத்தல் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப் படுகின்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் என்பது ஒவ்வொருவருக்குள்ளேயும் நடைபெறுவது. பெண்கள் தங்களது வாழ்க்கைக்குத் தாமே பொறுப்பாவார்கள். அதே நேரம் அவர்கள் தவறுகள் செய்வார்களேயானால் மற்றவர்களை அவர்கள் குற்றம் சுமத்த முடியாது என்பதே அவரது கருத்தாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்வதானால் பெண்களது பிரச்சனைகள் ஒரு சமூகப் பிரச்சனையாக இவரால் நோக்கப்படவில்லை. அன்றைய பெண்கள் அமைப்பினராலும், பெண்ணியவாதிகளாலும் இவரது பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.

1880களில் இருந்த படைப்பாளிகளான கமில்லா, அமாலியா போன்றவர்கள் சமூகத்தின்மீது வைத்த கடும் விமர்சனம் போன்று இவர் முன் வைக்கவில்லை. இதனால் சிக்றிட் உன்செத்தை பெண்நிலைவாதிகளின் வரிசையில் சேர்ப்பதென்பது சரியானதா என்ற கேள்வியும் நிலவுகின்றது. எனினும், பெண்ணெதிர்ப்பு வாதிகளின் முகாமுக்குள் அவரைச் சேர்ப்பதென்பதுவும் சரியானதல்ல. கருத்துரீதியான வேற்றுமைகள் இருப்பினும் அன்றைய பெண்களது நிலமைகளைத் தனது படைப்புக்களில் உள்ளதை உள்ளபடியே வெளிக் கொணர்ந்தவர் என்ற வகையில் சிக்றிட் உன்செத் முக்கியத்துவம் பெறுகின்றார். இவரது உருவப்படத்தைத் தாங்கிய தபால்லத் தலையை நோர்வே அரசு வெளியிட்டதோடு, 500குரோணர் தாளிலும் பொறித்து கெவுரவித்துள்ளது.

 

 

பின்னூட்டமொன்றை இடுக