பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் ’நட்பு’

என் தினசரித் தாகங்களைத் தீர்க்கும் மாபெரும் ஊற்று எனக்கு நட்பு! ஓடையாகி கரைபுரண்டோடும்
நதியாகி அருவியாய் அவை கண்களிலும் விழுந்தோடுவதுண்டு.

எத்தனை எத்தனை தோழமைகள்?

ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். வாழ்வில் ஒவ்வொன்றும் ஒரு அங்கம்.

சில நட்புகள் கை குலுக்கல்களோடு நின்று போய்விடுவதுண்டு. வாழ்வின் தூரங்களை எம்மோடு கடந்த சினேகங்களின் முகங்களைக்கூட பார்க்கவிரும்பாத தருணங்களையும் கடந்து வந்ததுண்டு.

நட்பென்பது நமது கதையை முழுதாய் ஒப்புக்கொடுப்பது. நமது இரகசியங்களைப் போட்டு வைக்கும் டிரங்குப்பெட்டிகள் போன்றவை. நம்பிக்கை மட்டுமே இதன் பெரும் தாழ். அது தொலைந்து போவது போல வேறொன்றும் நம் உலகை உலுக்கிப் போடுவதேயில்லை.

நம்பிக்கை தொலையும் போது அது சுயமரியாதையை அசைத்துக்கொண்டே புறப்படுகிறது. சுயத்தைக் கீறிப் பார்க்கும் அந்தக் கணத்தில், உடைத்ததை ஒட்ட முடியாத விசித்திர கண்ணாடிகள் போல ஆகிவிடுகிறது நட்பு நிலை.

நட்பென்பது ஒரு உணர்வு நிலைதானே?

காலாகாலமாய் ஒரே உணர்வு நிலையை தொடர்ந்து கொண்டே இருத்தல் என்பது ஒரு வரம். அப்படிப்பட்ட வரங்கள் எல்லார்க்கும் அமைவதில்லை. அவை மாறலாம். புதியதாய்த் தோன்றலாம். அதற்குக் காலமோ தூரமோ ஒரு பொருட்டல்ல.

1536302326095_IMG_4886__04549.1536902115காதலைப் போல நட்புக்கும் ஒரு பொறி தேவைப்படுகிறது. அதன் பயணத்தை நீளச் செய்வதும் நெகிழச் செய்வதும ஒருவித ஒருமித்த மன நிலையில்தான் சாத்தியப்படுகிறது.

’நான் அருகில்தான் நிற்கிறேன். அதுவும் உனக்காக நிற்கிறேன்’ என்ற உறுதியைத் தந்து கொண்டே இருக்காத எந்த நட்பும் தட்டினால் உடைந்துவிடும் போல ஒரு அசவுகரிய உணர்வைத் தருவன.

சொட்டுச் சொட்டாய் உடையும் சினேகங்களைப் பார்த்துக்கொண்டு நிற்பது, பிரியத்துகுரிய ஒருவரின் உயிர்பிரிவதை பார்த்துக்கொண்டிருக்கு‌ம் வலியை உணர்வது.

பிரபஞ்சத்தின் எந்த உணர்வையும் விட ஒரு தோழமைக்காக மட்டுமே இயங்கும், ஏங்கும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆனாலும் நிபந்தனையற்ற காதல் போல நிபந்தனையற்ற நட்பு சாத்தியாமா இல்லையா எனச் சொல்லத் தெரியவில்லை.

ஒருதலையாய் காதலித்துவிடலாம், நட்பு அப்படிப்பட்டதன்று.

காதலை எழுதிவிடலாம். நட்பைப் பேசுதல் எழுதுதல் மிகக் கடினம்.

தோழமையில் உள்ள தாய்மையுணர்வை உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

நிபந்தனையற்ற காதல் சாத்தியம் ஆனால் அது போல நிபந்தனையற்ற நட்பு என் உலகத்தில் சாத்தியமற்ற ஒன்றுதான். ஆனால் நிபந்தனைக்கான விடையாக கிடைக்கப்பெறுவதெல்லாம் இயற்கையாக நிகழ வேண்டும். அது எத்தனைக் கடினம்.

இந்த எதிர்பார்ப்புகள் அதிகமாக அதிகமாக அவை பூதாகரமாக வடிவெடுக்கும். ஒருவித பதட்டநிலை உருவாகும். பதட்டத்தை விடுவிக்கும் ஒரே வழி, தேவைகளை சுயமறுப்புச் செய்வதுதான் என்றாகிவிடும்.

இதை எழுதும்போது என்னை நானே ஏன் என்று கேட்டுக்கொண்டு தான் எழுதுகிறேன். மனிதமனம் எப்போதெல்லாம் இழப்புக்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் சில கேள்விகளையும் பதில்களையும் தானே எழுதத்தொடங்குகிறது.

மனம் அந்த இடத்திலிருந்து விலகி நின்று பார்க்கத் தொடங்குகிறது. அதற்கு பிறகு கடந்த காலங்களுடன் கட்டுப்படாமல் இருப்பதற்குரிய எல்லா வழிமுறைகளையும் கற்றுக்கொள்கிறது.

இது ஒரு தற்காப்பு நிலைதான்.
அவ்வளவேதான்!

உணர்வுகள் அழகானவை!
அதைவிட அற்புதமானது நட்பு!

..

பின்னூட்டமொன்றை இடுக