
Innovation? தற்போது பல இடங்களில் பலதரப்பட்ட முறையில் பாவிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் அந்தச் சொல் அதற்கான சரியான அர்த்தத்தில்தான் பாவிக்கப்படுகிறதா?
Innovation என்பதை புத்தாக்கம் என்று தமிழ்ப்படுத்தலாம். ஆயினும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தினை முற்றுமுழுதாக புத்தாக்கம் என்ற சொல் தருகின்றதா என்பது கேள்விக்குரியதே.
படைப்பாற்றலை ஆங்கிலத்தில் creativeness/creation என்று சொல்கிறோம். அதைத்தாண்டி Innovation என்ற சொல்லைப் பாவிக்கிறோம் என்றால் நாம் அதனை விளங்கிக்சொண்டிருப்பது அவசியமாகிறது.
புத்தாக்கம், படைப்பாற்றல், கண்டுபிடிப்பு என்ற பதங்கள் Innovationனுடன் தொடர்புடையதாக இருந்தாலும் இந்த சொற்பதங்களைத் தாண்டி வேறுபட்ட உள்ளடக்கப் பெறுமதிகளை கொண்டுள்ளது.
Innovation என்பது ஒரு படைபாற்றல்தான், புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும் ஆற்றல் என்றும் கூறலாம். ஆனால் கண்டுபிடிக்கப்படும் அனைத்தும் Innovation என்று ஆகிவிடாது. அதனால் Innovation என்ற சொல்லை நாம் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம்.
கண்டுபிடிப்புகள் எனும் போது அதை நாம் ஒரு விடயத்தின் பரிணாம வளர்ச்சி அல்லது தொடர்ச்சி என்று தொழில்நுட்ப ரீதியில் பார்க்கலாம்.
Innovation என்ற சொல் பாவிப்பதற்கு மூன்று விடயங்கள் முக்கியமானவை. New, usage, utility value.
- புத்தாக்கம் செய்யப்பட்டதாக இருத்தல் (புதியதாக இருத்தல்)
- உபயோகத்திற்கானதாக இருத்தல் (பாவனைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும்)
- தனித்துவமான பயன்பாட்டுப்பெறுமதியைக் கொண்டிருத்தல் (கண்டுபிடிப்புக்கான மதிப்பு இருத்தல் வேண்டும்)

அதாவது இவை புதுமையான கண்டுபிடிப்புகளாக மட்டும் இல்லாது, தேவையைப் பூர்த்தி செய்பவையாக இருத்தல் வேண்டும். அதைத் தொடர்ந்து இப்படியான படைப்புகள் புதிய சந்தைகளைக் கண்டுகொள்பவையாகவும் இருத்தல் வேண்டும்.
Innovation என்பது அநேகமாக வியாபார விடயங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்குப் பாவிக்கப்பட்டாலும், கலை – இலக்கியப் படைப்பாற்றல் தொடர்பாகவும் இவை பாவிக்கப்படுகிறது.
புத்தாக்கம் என்பது ஏற்கனவே இல்லாத ஒன்றை உருவாக்குதல் அல்லது ஏலவே இருக்கும் ஒன்றின் தொடர்ச்சநியை முற்றிலும் புதிய பரிமாணங்களோடு ஒரு மாற்றாக உருவாக்குதல்.
நடைமுறை உதாரணத்திலிருந்து ஒன்றைச் சொல்வதாயின் எரிபொருளில் ஓடும் வாகனங்கள், எரிபொருளிலும் பற்றறியிலும் ஓடுகின்ற நிலை புத்தாக்கத்தின் முதற்கட்டம். எரிபொருள் இல்லாது பற்றறியில் மட்டும் ஓடுகின்ற வாகனங்கள் பாவனைக்கு கொண்டுவரப்பட்டமை புத்தாக்கத்தின் அடுத்த பரிமாணம். ஓட்டுனர் இல்லாமல் தானியங்கியாக செயற்படக்கூடிய வாகனங்களின் வருகை புத்தாக்கத்தின் இன்னொரு பரிமாணம். தேவைக்கேற்ப தரையிலும் ஆகாயத்திலும் பறக்கக்கூடிய வாகனங்கள் எதிர்காலத்தில் வருமாயின் அது புத்தாக்கப் பரிமாணத்தின் மேலுமொரு தொடச்சியாக அமையும்.
கலைதொடர்பாகப் பாவிக்கப்படும் போது,
இந்த சொல் கலைகள் தொடர்பாக பாவிக்கப்படும் போது, தொடர்புடைய கலைஞர்கள் சொல்லின் பொருளை உணர்ந்து செயற்படுபவர்களாக இருக்க வேண்டும். காலாகாலமாக தொடர்ந்துவரும் கலையை அப்படியே கடத்தி வருபவர்களாக இல்லாது புதிய சிந்தனைகளை, சமூத்தின் தேவை அறிந்தும், அதன் பயன்பாட்டையும், தொடர்ச்சியையும் அறிந்து தமது படைப்புகளைக் கொடுப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
எமது தமிழ்கலைமரபோடு இதை ஒப்புநோக்கையில், புனிதங்கள் என்ற போர்வையில் இருந்து வெளிவரத் துணிந்தவர்களாக, விரிந்த சமூக நோக்குடையவர்களாக, புதிய சிந்தனைகளை துணிந்து கொண்டுவர முன்வருபவர்களாக, அதைப் பயனுள்ளதாகவும் அதற்கு ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
புதிய பயனுள்ள மாற்றங்களைக் கொண்டுவரும் சிந்தனையும், செயற்பாடும் கொண்ட கலைஞர்களால் மட்டுமே innovation என்பதைச் சரிவரப் புரிந்துகொண்டு செயற்படுத்த முடியும்.
***










