பட்டதகல் – கர்நாடகா

sdr

வாதாபியில் இருந்து ஏறத்தாழ இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பட்டடக்கல் கோவிற் தொகுதிகள்.

இங்கு அமைந்துள்ள கோவில்கள் ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இந்தியாவில் காணப்படும் மூன்று விதமான கட்டிடக் கலை அமைப்பை இங்கு காணலாம்.

இந்தியாவின் கட்டிடக் கலைப் பாணிகளான திராவிடம் , வேசரம் மற்றும் நாகரப் பாணிகளை எழுப்பிய இடமாக பட்டடக்கல் விளங்குகின்றது.

கோவிற் கட்டிடக் கலையில் பலவித நுணுக்கமான வேலைப்பாடுகளையும் , புதுமைகளையும் செய்து கற்றாராயும் ஒரு கலைப் பள்ளியின் ஆக்கங்களாக இக் கோவில்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய சாளுக்கிய வம்சத்தினர்களால் கட்டப்பட்ட பட்டடக்கல் கோவிற் தொகுதிகள் இன்றும் சிற்பக்கலையின் மகோன்னதத்தை பறைசாற்றுபவையாக இருக்கின்றன.

பட்டடக்ல் கோவிற் தொகுதிகளில் நான்கு கோவில்கள் தென்னிந்தியப் பாணியான திராவிடப் பாணியிலும், நான்கு கோவில்கள் வடஇந்தியப் பாணியான நாகரப் பாணியிலும் ஒரு கோவிலை இரண்டு பாணிகளும் கலந்த வேசரப் பாணியில் எழுப்பியிருக்கின்றனர்.

கர்நாடகாவில் உள்ள பல கோவில்கள் வேசரப் பாணியில் கட்டப்பட்டிருக்கின்றன.

வேசரப் பாணியிலமைந்த கோவில்கள் பெரும்பாலும் சாளுக்கியர்களாலேயே கட்டப்பட்டது.

வடஇந்தியாவிற்கான நாகரபாணியின் கோபுரங்கள் வளைவானதாகவும், கோபுத்தின் கட்டுமான வடிவமைப்பு மேலிருந்து கீழ் நோக்கிய கோடுபோல கலைநுணுக்கங்கள் கொண்டு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதுவே தென்இந்திய திராவிடபாணிக் கட்டடக்கலையில் கோபுரங்களில் காணப்படும் சிற்பவேலைப்பாடுகளின் ஒழுங்கு குறுக்குப்பக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பட்டடக்கல் கோவிற் தொகுதியில் உள்ள சிற்பங்கள் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டவை.

மிகச் சிறிய அளவில் உள்ள சிற்பங்களில் கதை சொல்லும் பாணி கோவிலின் உள்புறங்களில் உள்ள சிற்ப வரிசைகளில் காணப்படுகின்றன.

விரல் அளவே உயரமுள்ள இச் சிற்பத் தொகுதிகள் மூலம் ராமாயண, மகாபாரதக் கதைகளும், பல்வேறு இதிகாசக் கதைகளும் செம்மையாய் செதுக்கியுள்ளனர்.

நிறைய சிற்பங்கள் என்னைக் கவர்ந்திருந்தாலும் சில சிற்பங்கள் என்னை பிரமிக்கச் செய்து சில கணங்கள் என்னையும் சிலையாக்கி நிற்க வைத்தது.

சிற்பமொன்றில் பெண்ணொருத்தி சாய்ந்து தன் காலை நீட்டியபடி ஒய்யாரமாய் வீற்றிருப்பாள். அவளுடைய காதலனோ அவள் காலைப் பிடித்துவிடும் காட்சியை அவ்வளவு அழகாகவும் காதலுடனும் செதுக்கப்பட்டிருக்கும்.

மற்றொன்றில் ராமாயணத்தில் லட்சுமணனால் சூர்ப்பனகை மூக்கறுபடும் காட்சி.

ஒரு விரல் அளவுதான் சிற்பங்கள். அத்துணையும் நுண்கலையின் நுட்பம்.

ஆடல் அரசிகளும், பெண்களும், ஆடை ஆபரண வடிவங்களும், அவர்களின் விதவிதமான கொண்டைகளும், ஆடல் அரசனுடைய பிரம்மாண்டத் தோற்றங்களும் காணக் காண இன்பம். கரையக் கரைய பேரின்பம்.

பார்த்து ரசிக்க ஒரு சென்மம் போதாது.

இக்கோவில்களின் உள்ளேயுள்ள பல கணிகள் வழியாகப் பரவும் ஒளியானது உட்பிரகாரங்களில் அதன் தூண்களில் நடையில் பலப்பல மாயம் நிகழ்த்தி கண் மகிழ் காட்சிகளை காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.

பட்டடக்கல் ஒரு கோவில் அல்ல. பல கோவில்களின் தொகுதி. கட்டிடக் கலையின் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையல்ல.

கலைப்பிரியர்கள் நிச்சயம் காணவேண்டிய அற்புதம்.

நம்மை நாமே மறந்து திரிய இது போல பயணமும் காலமும் அமைந்தால் அதன் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருக்கலாம்.

பயணங்கள் இன்பம். கலையினூடான பயணங்கள் பேரின்பம்.

பயணங்கள் செய்வோம்…

பின்னூட்டமொன்றை இடுக