விஜயநகரப் பேரரசு – 2 – சுலே பஜார்/ சூலை பஜார் ( Harlots Market)

ஹம்பியில் நான் பார்க்க விரும்பிப் போன இடம் சுலே பஜார்/ சூலை பஜார்.

ஹம்பியில் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தேவரடியார்கள் வாழ்ந்த இடம் இது.

தேவரடியார்கள் பின்னைய காலங்களில் தேவதாசிகள் எனவும், தாசிகள் எனவும் அழைக்கப்பட்டது வேறு கதை.

இந்தியச் சுதந்திரப் போராட்டகாலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது தேவதாசி தொடர்பாக சமூகம் கொண்டிருந்த பார்வைக்கும் அதற்கு முந்தயை காலங்களில் தேவரடியார் மீது சமூகம் வைத்திருந்த பார்வைக்கும் வேறுபாடுகள் இருந்தன.

கோவில்கள் நிறுவனமயமாக்கப்பட்ட காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் தேவரடியார்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதொரு சமூகமாக இருந்திருக்கின்றனர் என்பதை இலக்கியச் சான்றுகளும் கல்வெட்டுகளும் எடுத்துரைக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்டவர்களாக மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்த்தும், செல்வ வளமும் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

கலைகளிலும், கோவிற் சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்தி வந்த தேவரடியார் மரபு ஏறத்தாழ பதினைந்தாம் நூற்றாண்டின் பின் வீழ்ச்சியைக் காணத் தொடங்குகிறது.

இணைப்பில் உள்ள புகைப்படங்களில் காணப்படுவது அன்றைய விஜயநகரப் பேரரசின் தேவரடியார்கள் வாழ்ந்த வீதி. இது அச்சுதராயா கோவிலை ஒட்டியதாக இருக்கின்றது.

கோவில் பாதையின் இரு பக்கங்களிலும் செழிப்பான உயரக் கட்டங்களில் வசித்தவர்களாக தேவரடியார்கள் இருந்திருக்கின்றனர்.

இன்று உடைந்து வெறும் தூண்களாக மட்டும் கிடக்கின்ற வீதியிலும், சிதைந்து ஊன்றி நிற்கும் தூண்களுக்கு மத்தியிலும் நடந்தோம்.

சில நூறு வருடங்களுக்கு முன் இந்த வீதியை கற்பனையிற் பார்த்தபடி நடந்து சென்றதும், நேரில் கண்ட காட்சிகளை மனதில் பதித்துக் கொண்டதும் பேரனுபவம்.

ஆடற் கலை வரலாற்றில் ஆர்வமும், ஆடற் கலையின் மேல் நேசமும் உள்ளவர்கள் காண வேண்டிய ஒரு இடம் சுலே பஜார்/ சூலை பஜார்.

அன்றைய ஆடற்கலை அரசிகள் வாழ்ந்த இடத்தில் நானும் ஆங்காங்கே ஓடியும் நின்றும் ஆடல் நிலையில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

வரலாற்றுச் சான்றுகள் ஊடாக தேவதாசி மரபு பற்றி அறிய விரும்புபவர்களுக்கு, முனைவர் நர்மதாவின் ’தமிழகத்தில் தேவரடியார் மரபு – பன்முக நோக்கு’ என்னும் நூலை நான் பரிந்துரை செய்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக