
ஹம்பியில் அமைந்துள்ள கலையம்சம் மிக்க ஒரு அழகிய கோவில் ஹசார ராமா கோவில்.
இது விஜயநகர அரச குடும்பத்தினரின் தனிப்பட்ட வழிபாட்டுத்தளமாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஹம்பியில் உள்ள கோவில்களுள் சிறிய அளவிலான கோவிலாக இருந்தாலும் ஏனைய கோவில்களில் இருந்து சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது.
ஹசார ராமா கோவில் பதினைந்தாம் நூற்றாண்டின் காலப்பகுதியில், இரண்டாம் தேவராயரால் கட்டப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் ஹம்பி உலகில் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளங்கள் மிக்க நகராகவும் இருந்திருக்கிறது.
நீண்ட கடைத்தெருக்கள் அடுக்ககுமாடிக் கட்டிடங்கள் வீடுகள் என இந்தியக் கட்டிடக் கலையின் உச்சம் அன்றைய ஹம்பி.
எல்லாக் கோவில்களிலும் இருப்பது போலவே இங்கும் சிற்பங்களும், சிற்பங்களின் மூலமாக கதை சொல்லும் பாணியும் போர் வீரர்களின் சிற்பங்களும் உண்டு.
ஆனாலும் இங்கே சாஸ்திரிய கலைகள் தாண்டி பொதுவியல் கலைகளும் செதுக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்தது.
கோலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், கையில் பாம்பை வைத்து நடனமாடும் ஆடல் நங்கையரின் சிற்பங்கள் என பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.
கையில் பாம்பை வைத்தாடும் நடன மரபு இருந்திருக்கிறது என்பது என் அறிவிற்குப் புதிது.
இப்படியான நடன வகைகள் சுற்றுச்சுவர் முழுவதும் மற்றும் உள்ளேயுள்ள பிராகரத் தூண்களிலும் செதுக்கப்பட்டிருக்கிறது.
கலையம்சம் பொருந்திய அழகுக் கோவில்.









