
சோக்கிரட்டீஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதனால் இங்கே எழுதப்படுவது அவர் பற்றிய விவரணையில்லை. இன்னொரு விடயத்தைப் பற்றிப் பேசுவதற்க்கு முன்னரான ஒரு சிறுகுறிப்பே.
இனம் மதம் மொழி தாண்டி கல்விக்கூடங்களிலும், கலைக்கூடங்களிலும் பாடப்பொருள் ஆகியிருக்கும் மனிதர் சோக்கிரட்டீஸ். கிருஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இவரை மேலத்தேய சமூகம், தத்துவர்த்த சிந்தனைப்போக்கின் ஆரம்பமாக கருதுகின்றனர். மேலத்தேய சமூகத்திடம் மட்டுமல்லாது, அனைத்து சமூகங்கிடையும், எம்மிடையும் பாட புத்தகங்களிலும், கலைமேடைகளிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
கல்விக்கூடப் பாடத்திட்டங்களில் தவிற்கமுடியாத ஒரு நபராக, மனிதாபிமான தத்துவக் கோட்பாட்டை நிறுவியவர்களில் முக்கியமானவராக சோக்ரடீஸ் இருக்கின்றார்.
கிரேக்க தேசத்து மனிதரான சோக்கிரட்டீஸ், கேள்விகளை எழுப்புவதன் மூலமே தனது கருத்தியலை சிந்திக்கச் செய்தார். எதையும் பகுத்தாயவும், சிந்திக்கவும் சொன்னது மட்டுமல்லாமல், எதிர்ப்புகளுக்கு மத்தியில் விடாது தனது கேள்விகளையும், பகுத்தாராய வேண்டிய தேவையையும் வலியுறுத்திக்கொண்டே இருந்தவர். சோக்கிரட்டீஸினுடைய முதன்மை மாணவர் புளோட்டோ என்பதையும் அறிவோம்.
அறிவே சரியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும், அக்காலத்து கிரேக்க தேசத்துக் கடவுட் கோட்பாடுகளுக்கும், கடவுள் கலாச்சார வழிமுறைகளுக்கும் எதிராகப் பிரச்சாரங்களைச் செய்தவர்.
கடவுட்கோட்பாட்டையும், கடவுற்கலாச்சார வழிமுறைகளையும் கேள்விக்குட்படுத்தி பகுத்தாயச் சொன்ன சோக்கிரட்டீசை சமூகம் விசம் அருந்தவைத்து கொன்றது வரலாறு.

கிருஸ்துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்துக் கடவுள் வழிபாட்டுமுறை எப்படி இருந்தது?
அன்றைய காலத்தில் கிரேக்க தேசத்து மக்களுடைய கடவுள் வழிமுறை இந்து சமய முறையையே ஒத்திருந்தது. செல்வத்திற்கும், காதலுக்கும், காற்றுக்கும், ஒளிக்கும், காமத்திற்கும் என்ற வகையில் கடவுளர்கள் இருந்தனர். தாய் தகப்பன், மகன், மகள், காதலர்கள் என கடவுளர்களுக்கு குடும்பங்களும் உறவுகளும் சிக்கல்களும் இருந்தன.
ஆனால் அன்றைய கிரேக்கத்துக் கடவுகள் இப்போது என்ன ஆகினர்? அவர்களும் அவர்களுடைய புனித கோவில்களும் எங்கே? அவைகளுக்கு என்ன ஆயிற்று?
சோக்கிரட்டீஸின் மறைவுக்குப் பின் 500 ஆண்டுகளில் கிரேக்க தேசத்தில் இருந்த கடவுட் கோட்பாட்டுமுறை முற்றிலும் அழிந்தே போய்விட்டது.
காலாகாலமாக நாடாத்தப்பட்டு வந்த பூஜைகள், பலிகள் எல்லாம் அழிந்தே போயின. சில கடவுள்களின் பெயர்களும் மறக்கப்பட்டுவிட்டன.
அப்படியானால் கிரேக்கத்தில் இருந்த கடவுளர்கள் என்ன ஆனார்கள்? காணாமல் ஆக்கப்பட்ட கடவுளர்களால் கடவுட்குற்றம் ஒன்றும் ஆகவில்லையே ஏன்?
கடவுள் கலைகளின் பொக்கிசம், கடவுளுக்கான பாசுரங்கள் காவியங்கள் கோயில்கள் என்று, எதற்காகவெல்லாம் சோக்கிரட்டீஸ் இந்த சமூகத்தால் கொல்லாப்பட்டாரோ அவை அனைத்தையும் தற்போது அதே சமூகம் மறந்துவிட்டது.
எதற்காக சோக்கிரட்டீஸ் கொல்லப்பட்டாரோ அக் கடவுளர்கள் மறைந்து இன்றைய கிரேக்கம் கிருஸ்தவத்தை தனது சமய நம்பிக்கையாக்கி கொண்டது என்பது வேறு கதை. இன்னொரு கடவுள் வழிபாட்டு முறைக்குள் கிரேக்கம் சிக்கிக்கொண்டது. இதனால் அவர்களுடைய அன்றைய புனித கடவுளர்கள் தொலைக்கப்பட்டு இன்றைய கிரேக்கத்தில் அருங்காட்சிப் பொருட்களாகவும் சிலைகளாகவுமே காணப்படுகின்றன.
அந்தக் கடவுளர்கள் ஏன் அந்நாட்டு மக்களைத் தண்டிக்கவில்லை? போற்றப்பட்ட புனிதங்கள் என்னவாயிற்று?
எமது சமூகத்தில் இன்னொரு சோக்கிரட்டீஸாக கேள்விகள் மூலம் பகுத்தாராயச் சொன்னவர் பெரியார்! நாம் பெரியாரை திட்டலாம், அவமதிக்கலாம், விசமென்று கொன்றே போடலாம்.
ஆனாலும் பகுத்தாய்வு என்பதும் ,கேள்விகளை எழுப்புதலும், மாற்றங்களும் மனித இனத்தின் பரிணாமவளர்ச்சியில் இன்றியமையாதவை தானே! சோக்கிரட்டீசை பாடபுத்தகத்திலும் மேடைகளிலும் வைத்திருக்கும் பலர் பெரியாரை எதிர்ப்பது முரணல்லவா?










