
பிரதி மேயர் கம்சாயினி இலங்கையில் நடாத்திய கலந்துரையாடல்கள் தொடர்பாக கருத்துக்கள் பேசப்பட வேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆனால் இங்கு காணப்படும் பெரும்பான்மை அனைத்தும் பெண் என்பதை முன்வைத்து கீழ்த்தரமாக இரண்டாம் மூன்றாம் தரப் பத்திரிக்கைகள் போல தனிநபர்கள் தமது வக்கிரத்தை எழுதுவது அருவெறுப்பையே உண்டு பண்ணுகிறது.
சமூக வலைத்தளப் போராளிகளே கம்சாயினியுடைய கலந்துரையாடல் சம்மந்தமாக தங்களுடைய கருத்துக்களையோ விமர்சனங்களையோ பதிவிடுங்கள். அதைவிடுத்து அவரே தரவேற்றிய புகைப்படங்களை எடுத்து ஏதோ புதிதாக நீங்கள் கண்டுபிடித்துவிட்டது போல பதிவிட்டு உங்களை நீங்களே கொச்சைப்படுத்தாதீர்கள்.
ஒன்று மட்டும் விளங்குவதே இல்லை. நம்மில் பலர் எப்போதும் ஒரு பெண் வளர்ந்துவரும் போதோ அல்லது தன்னை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தி நிற்கும் போதோ அவர் செய்யும் காரியங்களில் ஒரு தவறு இருந்துவிட்டால் போதும் அல்லது அது கூட இருக்கத் தேவையில்லை தன்னை தனித்துவமாக காட்டுபவளாக இருந்தாலே போதும், நடந்த விடயங்களைப் பற்றிப் பேசாமல் அப்பெண் தொடர்பான உடல், ஒழுக்கம், கலாச்சாரம், பெண் என்ற அடிமைக் கலாச்சார விழுமியங்களில் தாவி ஏறி மிகைப்படுத்திச் சவாரி செய்யத் தொடங்குகிறோம்.
இதுதான் இன்றை பல ராஜாக்களின் வீர சாகசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. பல கலாச்சாரக் காவல் ராணிகளும் இங்கு விதிவிலக்கல்ல.
சரி, உங்களது கருத்தியலிலே அல்லது மனநிலையிலே இருந்துகொண்டு பார்க்கப்போனால், பெண்ணை காப்பது ஆண்களுடைய கடமையாக நினைத்துக்கொண்டிருக்கும் ஆண்களான நீங்களே ஒரு பெண்ணை கேவலப்படுத்துவதை என்ன சொல்வது?
இப்படியான உடல் சார்ந்தும், வாழ்வுமுறை சார்ந்தும் கொச்சைப் பதிவிடுபவர்கள் 99 சதவீதம் ஆண்களாக இருப்பதன் காரணம் என்ன?
ஒரு பெண் இது செய்யகூடாது இது செய்யவேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்?
அந்த உரிமையை உங்களுகெல்லாம் யார் கொடுத்தது?
நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் ஒரு பெண் செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வருகிறது?
தவறென்றால் இருபாலரும் செய்யக்கூடாது தானே?
ஓ! பெண் புனிதமானவளா?
சரி பெண் யாருக்காக எதற்காக ஏன் புனிதமானவளாக இருக்க வேண்டும்?
சொல்லுங்கள்.
கடவுள் என்று சொல்வதும், மதம் என்று சொல்வதும், புனிதம் என்று சொல்வதும், பிறகு பெண்ணைத் தாங்கள் கடவுளாகப் பார்ப்பதாக, புனிதமாகப் பார்ப்பதாக, ஆற்றலுள்ளவளாகப் பார்பதாகச் சொல்லிக் கொண்டே, தீட்டென்பதும், புனிதமற்றவள் என்பதும், எங்கள் வருகை தெய்வக்குற்றம் என்பதும், என்னதான் சொல்லவருகிறீங்கள் இப்போது?
இந்த இலட்சணத்தில் இங்கு பலர் எல்லா இடமும் சமத்துவம் வந்துவிட்டது என்று வாதம் வேறு! சமத்துவம் என்பது ஒவ்வொருவர் மனதிலும் வரவேண்டும். ஒரு நாட்டின் எழுத்திலும், சில பல சலுகைகளிலும் அல்ல.
உங்கள் தரங்கெட்ட பதிவுகள் எல்லாம் அவரவர்கள் மனப்பீதியே அன்றி வேறில்லை.
சமத்துவமின்மை இலங்கையில் மட்டுமல்ல அதனதன் அளவில் உலகமுழுவதும் இருக்கிறது என்பதே உண்மை.
இப்பதிவு பெண்கள் தொடர்பாக சமூகம் மேற்கொள்ளும் கீழ்தரமான நடவடிக்கைகளுக்கான எனது குரலே தவிர இலங்கையில் அல்லது கம்சாயினியின் ஒட்டுமொத்த அரசியல் சமூகப்பார்வை, நடவடிக்கை தொடர்பாக எனக்கும் விமர்கசனங்கள் உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் என்ன வக்கிரத்தை கொட்டினாலும், என்ன கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டாலும், என்னதான் வசை பாடினாலும், உங்கள் தரம்கெட்ட கொச்சைப் பேச்சுக்களால் அடித்தே வீழ்த்தினாலும், பெண்கள் இந்த வக்கிரங்களுக்கெல்லாம் பழக்கப்பட்டு வெகுநாட்களாகி விட்டது. வீரியமுள்ள பெண்கள் எதையும் மீறி வந்தே தீருவார்கள், முன்னைக்கும் மூர்க்கமாக, மேலும் காத்திரமாக!
அதனால், பேச வேண்டியதை மட்டும் பேசுங்கள்!









