Each time a woman stands up for herself, without knowing it possibly, without claiming it, she stands up for all women.

“Each time a woman stands up for herself, without knowing it possibly, without claiming it, she stands up for all women ” – Maya Angelouart-woman-art-painting-i25629

கேள்விகளும், கேலிகளும், அவமதிப்புகளும், குத்தல்களும் தனக்கு வரும் என்று தெரிந்தும் ஒரு பெண் துணிந்து நின்று பேசுகிறாள் என்றாள் அது அவளுக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்காகவுமே அவள் எழுந்து பேசுகிறாள்.

உங்கள் வீட்டுப் பெண்களுக்கான இடஒதுக்கீடோ, கல்வியோ, வேலை வாய்ப்போ அல்லது பெண் துணிந்து செயல்படுபதற்கான இன்றைய நிலையையோ யார் பெற்றுக் கொடுத்தது?

கதவுகளின் பின்னால் எந்தக் கேள்வியும் எழுப்பாமல், தொலைக்காட்சிகள் தரும் இரண்டாம் மூன்றாம் தர நிகழ்வுகளுள் மூழ்கி, எந்தத் தேடலும் அற்று, உழைத்து, சமைத்து உண்டு, பணம் தேடி தானும் தன் உறவுகளும் என்று வாழும் மனிதர்களினால் இந்தச் சமூகம் இன்றை நிலையை அடைந்திருக்க முடியுமா?

நற்பெயர் வாங்கவும் சுயதேவைகளுக்கும் மட்டுமாய் வாழ்வதொன்றும் தவறேயில்லை. ஆனால் சமூகத்திற்காக வெளியில் வருபவர்களை, அடுத்ததலைமுறைக்காக நின்று பேசுபவர்களை, போராடுபவர்களை, பிறருக்காகவும் சிந்திப்பவர்களை கொச்சைப்படுத்த மற்றையவர்களுக்கு உள்ள உரிமைதான் என்ன?

கல்வி தருவது அடிப்படை அறிவு மட்டுமே. வைத்தியனோ, பொறியியலாளனோ, வக்கீலோ எந்த படிப்பும் ஒரு மனிதனின் அடிப்படை தொழில் வசதியை ஏற்படுத்துவதற்கானதாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தொழில் செய்யவும், பொருளீட்டுவதற்காகவும் அதன் அடிப்படைகளே கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படுகின்றன. இந்தச் சமூகத்தில் ஒரு தனிமனிதன் இயங்குவதற்கான அடைப்படை அறிவுதான் தொழில்முறைக் கல்வி.

உலக அறிவு என்பது தேடிக் கண்டெடுப்பது. அதை எந்த கல்விக்கூடமும் தந்துவிடாது என்பதை அறிவதே சிறந்த அறிவு. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு என்பதைத் தாண்டி, இன்றை சூழலில் சமூகத்தைப் புரிந்து செயலாற்றுபவரே அறிவாளி.

குறைந்தபட்சம் இந்த அடிப்படைக்கல்வி கூட எந்த தடையுமின்றி நமக்கு தற்போது கிடைக்கிறது என்றால் அதற்கான காரணம் யார்?

பெண்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக எத்தனை பெண்கள் களமிறங்கிப் போராடி இருப்பார்கள்? தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்களால் கிடைத்திருக்குமா? இல்லை போராடாமற்தான் எல்லாம் கிடைத்துவிட்டதா?

இப்போதும் ஒட்டு மொத்த உலகில் ஆய்வின் படி 27 மில்லியன் மக்கள் அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர். மேலும் ஒரு பில்லியனுக்கு மேலானோர்க்கு இன்றும் கல்வியில்லை. மனித உரிமையில் பத்தில் ஒரு வீதம் கூட கிடைக்காத மனிதர்களின் தொகை அதீதம். உலகிலேயே பெண்களுக்கு அதிகபாதுகாப்பில்லாத இடம் இந்தியா என்று ஆய்வு கூறுகிறது (Dinastiftelsen.no). உலகில் உள்ள 50 வீதத்திற்கும் அதிகமான சொத்துக்களை 1 வீதம் உள்ள பணக்காரர்களே வைத்திருக்கிறார்கள் (Nettavisen.no) . இதைப்பற்றி யார் சிந்திப்பது?

பெண்களை ஒரு சமூகம் எப்படி நடாத்துகிறது என்பது கலாச்சாரமில்லையா? ஒரு சமூகம் துணிவோடும் உலக அறிவோடும் வளர்க்கப்படுவது என்பது கலாச்சாரமில்லையா? இரு பாலினமும் ஒருவரை ஒருவர் சமத்துவத்தோடும், மரியாதையோடும் நடாத்துவது கலாச்சாரத்தை சார்ந்ததில்லையா? எமது கலாச்சாரம் என்பதை நாம் எமது உடையிலும், அலங்காரத்திலும் ஆட்டம் பாட்டங்களில் மட்டுமாகக் குறுக்கிக்கொண்டிருக்கப் போகிறோமா?

நீங்கள் இன்று உங்கள் வேலையுண்டு, நீங்களுண்டு என்று நிம்மதியான ஒரு சூழலில் வாழ்கிறீர்கள் என்றால் அதற்க்குப் பின்னால் உங்களுக்காக களத்தில் இறங்கி, துணிந்து பேசி, உழைத்து, வெறுப்புகளை பெற்று, புறம் கூறப்பட்டு, நலிந்து போன சமூகப்போராளிகள் இருக்கின்றனரே ஒழிய, உங்கள் பார்வையிலான குடும்பத்து பெண்களோ, ஆண்களோ, குத்துவிளக்குகள் எனப்படுபவர்களோ, எதிர் கேள்விகளே எழுப்பாத இன்றைய பெண்மையின் குறியீடுகளோ இல்லை என்பதை அறிக.

அலங்கார பொம்மையாகவோ, பூஜையறையிலோ, புனிதம் என்ற ஒரு போர்வைக்காகவோ குறுகிவிட்டிருக்கும் பெண்களைக்காட்டிலும், குறைந்தபட்சம் தனக்கான குரலைத் தானே எழுப்புவது, சமூகத்திற்காகவும் சிந்திப்பது, மிகத் துணிவது போன்றவையே அதீத பெண்மைக்குரிய லட்சணங்கள் என்பேன்.

பின்னூட்டமொன்றை இடுக