புதுமைப்பித்தனும் பாரதியும் எப்படி ஒரே பேசுபொருளை இரண்டு வேறுபட்ட இலக்கிய வடிவங்களுக்கூடாகக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க சுவாரசியமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.
இவர்கள் வெவ்வேறு இலக்கிய வடிவங்களை மட்டும் கையில் எடுக்கவில்லை. எடுத்த விடயத்தைப் பார்க்கும் விதமும் அதைக் கையாளும் முறையும் மிக மிக வேறுபட்டிருக்கிறது.
பாரதியோ காதல் குணம் படைத்தவன்.
அவனுடைய வடிவமோ ஒன்றிப் போவது. இதயத்திலிருந்தே விடயங்களைக் கையாள்வது. காதலும், ஆன்மீகமும், தத்துவமும் கூடிக் கவி செய்வது. கவிதையில் ஓசையும், அழகும், ஆழமும் கொண்டுவரும் கவிதைச் சிற்பி. மனதை பறக்கச் செய்யும் சூத்திரதாரி. மனதிற்கு நெருக்கமான காதலன். தோளோடு சாய்ந்து கொள்ளக் கேட்கும் எழுத்து.
புதுமைப்பித்தனோ கிண்டல்காரன். எதனோடும் சமரசம் செய்து கொண்டவனல்ல. யாரையும், எதையும் எதற்காகவும் விட்டுவைக்காமல் எழுதுபவன். அவனுடைய ஒவ்வொரு வாக்கியமும் அதற்கேயுண்டான வீரியத்தோடும் பின்புலத்தோடும் நிற்கிறது. மனப்பேய்களையும் அதே மனதின் அருவமாகக் கிடக்கும் பயங்களையும் ஒருசேர வெளிச்சப்படுத்துபவன்.
ஒரு கதையிலேயே பல பரிமாணங்களையும், பல கிளைக் கதைகளையும் சுவாரசியத்தோடு சொல்லிப்போவது அத்தனை எளிதல்ல. அதைப் புரிந்து கொள்வதும் அத்தனை இலகுவானதல்ல. நமது முகத்தை நாமே பார்ப்பது என்பது இங்கு தோள் மீது விழும் கசையடிகளாகிவிடுகிறது.
இருவருக்குமே பொருந்தும் இரண்டு விடயங்கள், அவர்களது பொருளாதார நிலை, அவர்கள் வாழ்ந்த நாள்கள்.
இருவரையும் ஒருசேரப்படிப்பது…. அது வாத்தைகளுக்கானது அல்ல.
அனுவபம்!









