எல்லாம் மனது ஏதோ ஒன்றை நினைத்து ஏங்கத் தொடங்கி விடுகிறது.
சடசடவெனக் கொட்டி, மழை போடும் கூரைச் சத்தத்தைக் கேட்டு, விடுபட்டதொரு இறகினைப்போல மனம் அமைதியாகிவிடுகிறது.
மேலும் இக்கணங்களெல்லாம் ஏன் உன்னையே நினைவுபடுத்துகிறது சொல்!
இலைகளின் முனைகளில் இருந்து கொட்டும் ஒவ்வொருசொட்டும் எத்தனை சுவர்கள் தாண்டியும் வந்துவிடுகிறது.
அந்தச் சலசலப்பு அதுதான் உன் நினைவுகள்போல அவை எதையும் ஊடுருவிச் சேரவல்லது.
நீ அறியாததா என்ன!
மழைநாள் எத்தனை அழகானதோ, அத்தனை விசித்திரமானதும் கூட!
இப்போது பார் இந்தத் தேநீர்க் குவளையின் சூட்டிலிருந்து உன் கைகளின் கதகதப்பு ஆழ்நெஞ்சை சிலிர்ப்படையச்செய்கிறது.
இலையுதிர்காலம் கூட பூக்கச்செய்யும் தருணங்களையல்லவா சமைக்கிறது!
நான் இரசித்த கவிதைகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் படித்து எனது வாழ்நாளை இதுபோலொரு மழைபொழுதொன்றில் நிறுத்திக்கொள்ள முடியாதா?
இந்த அடைமழையின் எந்தப் பக்கத்தில் நீ இருக்கிறாய்?
உன் ஆன்மாவின் ருசியை இந்தத் தேநீர்குவளையில் அன்றி வேறு எங்கு காண்பேன் சொல்.
உன்னிடம் சொல்லவென வார்த்தைகள் மழைத்துளிகளின் எண்ணிக்கையைவிட அடர்த்தியாகிக் கிடக்கிறது.
எனது சேதிகள் அனுப்பவும் ஒரு வழியொன்றுண்டோ? அந்த வடதிசை நட்சத்திரத்திடம் அனுப்பி வைக்கவா?
சாளரத்தின் திரைகளை விலக்கி மேற்திசையைப் பாரேன்.
ஒருவேளை இந்தப் போர்வையின் இளம்சூட்டிலோ, வீழ் துளியின் சிலிர்ப்பிலோ, மேலெழும் மண்வாசத்திலோ அல்லது இந்தப் பேரமைதியிலோ உன் ஸ்பரிசத்தின் ஒருசில கணங்களை நான் பெறக்கூடும்.
மழைநாள் எத்தனை அழகானதோ, சமயங்களில் அத்தனை கொடுமையானதும் அதுவேதான்.
ஏக்கங்களின் ருசி கிளர்ந்தென் இதயத்தின் வலது மூலையில் அழுத்துகிறது. பின் அது பல வர்ணங்களாய், ஆயிரமாயிரம் மின்மினிகளாய், கருநீல பட்டாம்பூச்சிகளாய், பெருங்காடாய், நிலவுகள் சொரியும் ஆழ்கடல்ப் பொழுதொன்றாய், சிதறிய கண்ணாடிச் சில்லுகளாய் எண்திசையெங்கும் அதே முகமாய்…
அப்பப்பா!
மழை என்பது வெறும் நனைதலா என்ன?
என்னை
நான் புதைப்பதும்
தொலைப்பதும்
எரிப்பதும்
கொடுப்பதும்
எடுப்பதும்
உதிர்வதும்
பூப்பதும்
பிரபஞ்சம் கொள்வதும்
அதனோடு இயைவதும்
இயைவே கூத்தென
கூத்தே இயைவென!
என்ன
இன்னும் சொல்லவா?









