நேற்று வானம் உடைந்து தண்ணீரில் கிடந்தது என்றால், நம்பமுடிகிறதா? அதன் அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்தக்காட்சி ஒருவித மாயை. மாயையை முழுமையாய் உணர சில நொடி தனிமை தேவைப்படுகிறது. அது, அந்தத் தனிமை அந்தக்கணம்தான். பிறகு தனிமையை உடைத்தெறியவே மனம் விரும்புகிறது.
உணர்வுகளை எல்லாம் அறிவிடம் அடிபணிய வைத்துவிடும் இந்தத் தனிமையை, அதற்காகவேனும் உடைத்துப்போட வேண்டும். தனிமையில் மனம் தான்தோன்றித்தனமாய் கட்டுடைத்துச் செல்வது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. கட்டுடைப்புகள் அசௌகரியமானவை. அதனால்தான் அசௌகரியங்கள் எல்லாம் யாவும் விலகிவிட்ட ஒரு சின்னக்கணம் பார்த்து ஓடிவந்து என்னோடு உட்கார்ந்து கொள்கிறது. மனதை திறந்து அதன்பாட்டில் கசியவிடுகிறது. அதுவே பெருவெள்ளமாகி ஓடும் பொழுதுகளில், மனதிற்குச் சின்னதாய் அணைபோடும் முயற்சிகளாகத்தான் கவிதைகளும் கட்டப்படுகின்றன. அதன் வேலையும் நிமிடக்கணக்கில் முடிந்துவிட எனது தனிமையை வெட்டியெறியும் முயற்சியில் மீண்டும் நான் இறங்கிவிடுகிறேன்.

புதுமைப்பித்தனின் மொழியாக்கமான ’இனி’ சிறுகதை படித்ததில் இருந்து தனிமை இன்னும் சற்று பயமுறுத்துவதாகவே இருக்கிறது. ஒரு கலைஞனுக்கு, ஒரு கவிஞனுக்கு தனிமை வரம் என்கிறார்கள். கலையையோ கவித்துவத்தையோ ஊட்டும் ஒன்றாகத் தனிமை இருந்துவிட்டால் தனிமை ஒருவேளை இனிமையானதாக இருக்கக்கூடும். அது அப்படி இல்லை என்பதே பல சந்தர்பங்களில் யதார்த்தம். கலைஞர்களோ கவிஞர்களோ உணர்வுகளைச் சமைப்பவர்கள் என்றாகையில் அச்சந்தர்ப்பத்திலும் தனிமை என்பது உணர்வுகளுக்குள்ளேதான் உழலத்தொடங்குகிறது. தன்னை உணர்த்தும் இந்தத் தனிமை அச்சமூட்டுகிறது.
தனிமையில் இருக்கும்போதுதான் உண்மை என்று அறிவு சொல்வதையெல்லாம் மனம் நிராகரிக்கத்தொடங்குகிறது. இவைதான் விபரீதமான பொழுதுகள். சமயங்களில் அறிவுகூட மனதோடு நட்பாகிவிடும். அந்தப் பொழுதுகள் இனிமையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் விசித்திரம் மிக்கவை.
மனித ஒழுங்குகள் பலதும் இயற்கைக்கு மாறானதாகவே இருக்கின்றன போலும், அதனால்தான் அவை கடைப்பிடிக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இயற்கையான ஒன்றை மனிதகுலம் அமைப்பிற்குள் கொண்டுவரத் தேவையில்லைத்தானே. ஒழுங்குகளும், கட்டமைப்புகளும் மனித இயற்கைக்குப் புறப்பானதாக இருப்பதால்தானே மீறுதல்களும் நடக்கின்றன. செயற்கைத்தனமான எமது அமைப்புமுறைகள் பழக்கப்படுத்தப்படுகிறதே தவிர அதுதான் சரியென்று சொல்லமுடியுமா என்ன?
ஒவ்வவொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு விதிமுறைகள், வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வாழ்வுமுறைகள். இதில் எந்தச்சமூகத்தினதை சரி என்று நாம் வாதிட முடியும்? எல்லாம் மனிதக் கண்டுபிடிப்புகள். இந்தக் கண்டுபிடிப்புகளில் இருந்து விலகுதல் என்பது குற்றவுணர்வை தருகிறதே, அதுசரிதானா? அமைப்புகளும் ஒழுங்குகளும் இயற்கைக்கு மாறான மனித தேவையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. அதனால்தான் இயற்கை எப்போதும் வென்றுகொண்டே இருக்கிறது. நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம்.
விதிகளுக்குள் இருந்து வாழுதலில் இருந்து கழன்றுவருவது ஒரு போதை. தார்ப்பாதையில் இருந்து விலகி புதற்களிடையேயும் காடுகள் வழியேயும் நடப்பது போல, இதுவும் சிலிர்ப்பைத் தருகிறது, ஒருவித தேடலும் பரபரப்பும் நமக்குள் ஏற்படுகிறது. சீரமைக்கப்பட்ட பாதைகளிலிருந்து கொஞ்சமாய் விலகி நடப்பதென்பது திகில்சுகம் கொண்டது. ஆனாலும் அதை நாம்; பிரக்ஞைபூர்வமாக அறிந்திருத்தல் வேண்டும். இல்லாவிடில் இந்தச்சமூகக் கட்டமைப்புகளுள் மொத்தமாக அமிழ்ந்துபோக நேரிடும். மனிதக் கடவுளர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். புராணக் கதைகளில் காண்பிக்கப்படும் கடவுளின் சாபங்களைக் காட்டிலும் கொடியவை இவை.
சரி தனிமை என்பதுதான் என்ன? இங்கே விரிந்து பரந்து கிடக்கும் இயற்கையோடு தனிமையில் நடப்பதா? துறவு மனப்பான்மை கொண்டு எதையும் துறப்பதா? அப்படித் தோன்றவில்லை எனக்கு. பெரும்கூட்டத்திலும் என்னால் தனிமையை உணரமுடியும். இயற்கையுடனான இந்தத் தனிமையிலும் மனிதர்கள் என் மனதோடுதான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தனிமை என்பதைக் கையாளத்தெரியாத வரை அது சாபம். ஆனால் உண்மையில் தனிமை சுயதேடலின் ஒரு பாகம் என்றே நினைக்கின்றேன்.
தினசரி வாழ்க்கையில் கடந்து போன பூக்களை எல்லாம் நின்று நிதானமாக கவனிக்கிறது தனிமை. நின்று நிதானிக்கும் ஒவ்வொரு கணமும் துறவு கொள்கிறது மனம். இயற்கையோடு கரைதலை மேவி நிற்கும் ஒரு துறவுண்டோ? தெரியவில்லை. நக்கீரரைப் போல தெரியாத விடயங்களுக்கு நின்று வாதாடுதல் சரியன்று. உணர்தலை உணர்ந்தபடி சொல்லுதல் போதும்.
நான் இன்று இருப்பது ஒரு தீவு. கடலும், மலையும், மரங்களும், அதில் பறவைகளும். அற்புதம். இந்தக் கடல். கடலைப்போலவேதான் ஆழமானது தனிமை. அனைத்து உயிரினங்களுக்குமான தனிமையைக் கடல் அள்ளிக்கொடுக்கிறது. அலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் கண்களுக்குள் அலை இடம்மாறி வீசத்தொடங்குகிறது. கடலோடு கிடக்கும் பொழுதுகளில் எமது உயிர் வெகுதூரம் பயணிக்கிறது போலும், அதனாற்தான் பறவைகள்கூட இங்கே தம்மில் ஆழ்ந்துபோவதாய்த் தெரிகிறது எனக்கு. கடல் தனிமையின் உச்சம்.
இருந்தும் தனிமை உடைக்கவே விரும்புகிறேன் நான்.









