நாயகனின் செருப்பை ஏன் காட்டுகிறீகள் என்று நாங்கள் கேட்டதுண்டா

சாயஉதடுகள் குவிப்பதுவும்
மைஇமைகளைக் கொட்டுதலும்
காற்றிற் கூந்தல் சுற்றிச் சுழலுதலும்
அரைநிர்வாணமாய்
குலுங்கும் முலைகளுடனும்
வெண்சாயத் தேவதைக்கனவுகள்
சுமந்துவரும் மனுசிகள் சுரக்கும் திரைஅரங்கில்,
நாயகனின் செருப்பை
முதலில் காட்டுகிறார்கள்
ம்…?

கடவுள் உட்பட
இப்படியிருக்கக் கடவதாக
சொன்ன இயக்குனர்கள் மற்றும்
மனிதர்கள்

ஏதோவொன்றின் நகலாகவே விரும்பும்
திரைமார்பில் பாலுறுஞ்சிய
தோழர் தோழியரின் கனவுகள்
அப்படியே கலையாதிருக்கிறது
எப்போதும் விறைத்துப்பெருத்த வண்ணமே
இருக்கும் திரைமார்புகள்

இங்கு யார்மீதும்
எதற்காகவும் ஆத்திரப்படுவதற்கு முன்
எதிர்த்தலை முதலில்
என் சலனத்தோடு வைத்தபின்
வருவதாயிருக்கின்றேன்

குற்றம் சுமத்துதற்கு முன்பும்
தப்பித்தலிற்குப் பின்பும்
அழகிய சர்ப்பங்களென வளைந்து நெளிந்து
குறுஞ்சந்துகளிலும் சுற்றிப்படர
திரையிற் பிடித்த நெருப்பு
பச்சை பச்சையாய் வளர்கிறது.
….
(கறுத்தபெண் கவிதைத் தொகுப்பிலிருந்து)

பின்னூட்டமொன்றை இடுக