ஜடாமுடியில் நெளியும் பாம்புகள்

என் வெளிமீது படரும்
பொய்க்காலங்களின் கண்கள்
என்னை மேவி நுழைகிறது

என் ஜடாமுடியிலிருந்து பிடுங்கி எறிந்த பிறகும்
இறகு முளைத்த சர்ப்பங்களென
நினைவுகளில் ஊர்ந்து
விடத்தின் வீரியத்தை
வக்கிரமாய் கக்கியெறிகிறது

ஆற்றாமல்
நெளிந்து, அருவெறுத்து
ஒதுங்கி நின்று
தள்ளி நடந்து
பாராமல்ச் சென்றும்…

உன்னோடானா
அன்றைய பொய்காலங்களின்
தனல் பட்டு
அதிர்ந்து மௌனித்தேன்

ரத்தம் கண்ட வடுகளில் வலி
பழைய புண்களைக் கிளறும்
துர்நாற்றம் பரபி உச்சந்தலையுள் ஊடுருவும்

சடலங்கள் எனக்கடந்த யுகங்கள்
மீண்டும் நிகழுமென் வெளிமீதில்
பிளந்த இரவுகளாய்
ஒரு யாமம் முழுதும்
வெறுமே இறந்தேன்

எழும்பினும்
நினைவுகள் துளைக்கும்
தீயாகி மொய்க்கும்
என்றேனும்
இந்நினைவுகள்
பற்றி எரியா நீராக
என் வெளியாவும் ஆகக் கடவதாக!

பின்னூட்டமொன்றை இடுக