
இன்று 18.11.2012 தினத்தந்தியில் வெளியான செவ்வி
எடுக்கப்பட்ட விடயத்தில் ஒரு சில விடயங்களே அங்கு போடப்பட்டதால் இங்கே முழு பேட்டியையும் தந்திருக்கின்றேன்.
தங்களைப் பற்றி
இலங்கையில் குரும்பசிட்டி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட நான், போரில்தந்தையை இழந்த நிலையில் எனது தாயாருடன் தமிழ்நாட்டிற்கு நான்கு வயதில்; புலம்பெயர்ந்தேன்.
அதன் பின் பன்னிரண்டு வயதிலிருந்து நோர்வே மண்ணில் எனது தாயாருடன் வாழ்ந்துவருகிறேன். எனது கலை இலக்கிய ஆர்வத்திற்கு எனது தாயாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.தகவல்தொழில்நுட்பம் படித்து, தற்போது Miele எனும் நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறை நிர்வாகத்தில் பணிபுரிகின்றேன். இலக்கியம், மற்றும் நடனம் என்ற துறையில் சிறுவயதிலிருந்தே கொண்ட ஆர்வத்தினால் இந்த இரண்டு துறையிலும் எனக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. பதினாங்கு வயதில் “வளர்நிலா” என்ற சிறுவர்இதழ் ஒன்று நோர்வேயில் நடத்தியிருக்கிறேன். அந்த பத்திரிக்கையை நடாத்திய நிலையில் மூன்று வருடங்களின் பின் நின்றுபோனது என்பது இன்றும் ஒரு வருத்தமாகவே உள்ளது. நோர்வேயில் நடனத்துறையில் பத்துவருடங்களுக்கு மேலாக கலாசாதனா என்ற கலைக்கூடத்தின் இயக்குனராகவும் இருக்கின்றேன். சென்ற ஆண்டு கல்கியின் “சிவகாமியின்சபதம்” நாவலை நடன நாடகமாக்கி எமது கலைக்கூடத்தினால் மேடையேற்றியது ஒரு புதிய அனுபவம்.
காதல் அனுபவம்
வீட்டின் எதிர்பை மீறி 2002 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டவள் நான். காதல் என்பது ஒருமுறைதான், காதல் புனிதமானது என்ற கொள்கையெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் அவரவர் தம் வாழ்கையை தாமே தெரிவுசெய்வதே சிறந்தது என்பது எனது கருத்து. சாதி, இனம், மதம் போன்றவற்றை தாண்டிசெல்வது என்பது எம் சமூகத்தில் காதல் திருமணங்களால் சாத்தியமாகிறது.
பெண்களின் நிலைமை நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறதா?
உலகம் முழுமைக்கும் பெண் என்பவள் ஒரு வியாபாரப் பொருளாக இருக்கும் காலகட்டத்தில் பெண்கள்மீது படிந்திருக்கும் சமூகத்தின் பார்வை என்பது எல்லா நாடுகளிலும் எந்த ஏற்றத்தாழ்வுமில்லாமல் ஒன்றாய்த்தான் இருக்கின்றது. ஒரு ஆணுடைய பார்வைக்குப் பெண் என்பவள் வெறும் கவர்ச்சிப்பொருள்தான். இதுதான் யதார்த்தம். தாம் ஒரு அழகுப்பொருள் என்று காலகாலமாக ஊட்டப்பட்ட நிலையில் பெண்கள் இன்றும் பெரும்பான்மையினர் தம்மை ஒரு அலங்கார பொம்மை போன்ற உணர்வுடனே தமது வாழ்க்கை வட்டத்திற்குள் வளையவருகின்றனர். இதற்கு நானும் விதிவிலக்கானவள் அல்ல. இந்த நிலை மாறாமல் பெண் என்பவள் முழு சுதந்தரம் அடைந்தவளாக சொல்லிவிட முடியாது. மேலேத்தேய நாடுகளில் பெண்களின் சுயசிந்தனையும், அவர்களுக்குத் தேவையான சலுகையும், சூழலும் மற்றும் வசதிவாய்ப்பும் எமது நாட்டுடன் ஒப்பிடும் போது அதிகமாய் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பார்தா போடுதலை எதிர்தல் என்பதும், ஆணுக்கு நிகராக எதையும் செய்தல் மட்டும் பெண்விடுதலையைப் பேசுதல் என்றாகிவிடாது. ஆடைகுறைப்பு என்பதும் பெண்சுதந்திரம் ஆகிவிடாது. அவளுடைய சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் செயற்பாடுகள் என்பன எந்த வகையிலும் முடங்கிவிடாமல் தன்னை வெளிக்கொணரும்போது ஆடைகள் பற்றிய அலட்டல்கள்,ஒரு ஆணைப்போல தான் இயங்கவேண்டும் போன்ற எண்ணங்கள் தேவையற்றதாகிவிடுகின்றது. சுயசிந்தனை மற்றும் படைப்பாற்றல் மிக்க பெண்கள் வளர்ச்சியடைந்த நாடுகளைவிட ஏனைய நாடுகளில் அதிக சவால்களையும் மனஉளைச்சல்களையும் சந்திக்கின்றனர். உலக அளவில் பெண்கள் இன்னமும் அறிவியல், மற்றும் பொறியியல் கல்வியை தேர்ந்தெடுப்பது மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றது. முக்கியமாக எது ஆதிக்கச் செயல் என்பது இன்றைய நிலையில் பெண்ணுக்குப் பெண் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நான் நினைக்கும் பெண்விடுதலை என்பது ஏனைய பெண்களுக்கானதாக இருக்கத் தேவையில்லை.ஓவ்வொரு பெண்ணும் பெண்விடுதலை என்பதற்குரிய அளவுகோலை வைத்திருக்கின்றாள். அது பெண்ணுக்குப் பெண் மாறுபடும்போது நாடுக்கு நாடு பெரிதும் மாறுபடுகிறது.அழகு பதுமைகளாக இருப்பதை விட்டு அறிவாற்றலையும் மனதுணிவையும் பெறுதல் என்பதே சுயசிந்தனையையும் பெண்களது சுதந்திர செயற்பாட்டையும் வளர்ச்சியடையச் செய்யும்.
உலக நாடுகளிலே எங்கு பெண்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பதாக எண்ணுகறீர்கள்?
அதுதான் சொன்னேனே… ஆதிக்கச் செயல் என்பது இன்றைய நிலையில் பெண்ணுக்குப் பெண் மாறுபடும். நாட்டுக்கு நாடு அதன் அளவுகோல் மாறுபாடுகிறது. பல சமுதாயங்களில் அவமானப் பேச்சுக்களே பெண்களின் சுதந்திரச் செயற்பாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருநோய். இது நாட்டிற்கு நாடு, சமூகத்திற்குச் சமூகம் மாறுபடுமே ஒழிய எந்த நாட்டிலும் பெண்கள் முழுசுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது. வளர்ச்சியடைந்த சமூகத்தில் இருபாலரினதும் சிந்தனை வளர்ச்சியும் விரிவடைந்திருக்கிறது. பெண்கள் தொடர்பான ஆண்களுடைய குறுகிய மனப்பான்மை விரிவடைவது, பெண்களின் சுதந்திர மனப்பான்மை விரிவடைவது, அவமானப்பேச்சுக்களையும், மனஉளைச்சல் தரும் பாதிப்புகளையும் குறைக்கும். பெண்ணிடம் இருந்து சமூகத்தின் உடல்சார்ந்த பார்வை விலகும்போது பெண்விடுதலை சாத்தியப்படும். எந்த நாட்டில் பெண்கள் உடல்சார்ந்த பொருளாக பார்க்கப்படாமல் இருக்கின்றனரோ அந்த நாடு பெண்விடுதலை கண்ட நாடு எனலாம்.
உங்கள் தனித்துவம் என்ன?
என்னிடம் தனித்துவம் என்று எதையும் சொல்லிவிட முடியாது. வெகுசாதாரணமான பெண் நான்.எங்கள் சமூகத்தில் பார்த்தால் சிறுவயதில் பெண்கள் திறமைமிக்கவர்களாவும், அவர்களுடைய வளர்ச்சிக்காகப் பெற்றோர்கள் தம் வாழ்வைப் பணயம் வைத்து அவர்களுடைய திறமையை வளர்த்தெடுப்பவர்களாகவும், வெளிக்கொணர்பவரகளாகவும் இருப்பார்கள். எத்தனை திறமையிருந்தாலும் திருமணமாகிவிட்டவுடன் பெரும்பான்மையினர் குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதும், தம்மை வீட்டிற்குள் குறுக்கிக் கொள்வதுமே பிறவியின் பயன் என்ற உடன்பாட்டிற்கு வந்து விடுகின்றனர். பெண்களுடைய தனித்துவம் என்பது குடும்ப வாழ்க்கைக்குள் அடிபட்டுப்போகின்றன. தமது கனவை தம் பிள்ளைகளிடம் திணிக்கும், எதிர்பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். அந்தப் பிழையை நான் விடமாட்டேன். எனது கனவு வேறு, எனது குழந்தையின் கனவு வேறு.வளர்ந்த நாடுகளில்; புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் கூட தமது கனவுகளைத் தமது குழந்தைகள் மீது திணிப்பவர்களாகவே இருக்கின்றனர். அன்பு, மென்மை, அமைதி, பொறுமை, அழகு, பொறுப்பு,தாய்மை மற்றும் அப்பாவித்தன்மை கொண்ட பெண்ணையே பெற்றோர்களும், கணவன்மார்களும், எம் ஒட்டுமொத்த சமூகமும் விரும்புகின்றது.இதுதான் இன்றைய நிலை. இது தவறில்லை ஆனால் அதற்கும் மேலாக சிந்தனையுடைய பெண்களுக்கான வரவேற்பு இன்றும் எம் மக்களிடையே இல்லை. நல்ல பெண் என்ற நற்பெயர் வாங்குவதற்காக பெண்கள் தம் வாழ்க்கையைக் குறுக்கிக்கொள்வதில் திருப்பதியடைகின்றனர். வீரம், கோபம்,ஆளுந்திறன் பெண்களுக்கு உண்டென்ற மனப்பக்குவத்தை எமது சமூகம் இன்னும் எட்டவில்லை. புறஉலகில் இருக்கும் எனது ஈடுபாடென்பது எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தாருக்கும் மனஉளைச்சல்களைத் தந்துகொண்டிருந்தாலும், இதுவே எனக்குப் பெரும் தூண்டுதலையும்ஏற்படுத்தியிருக்கின்றது.அவர்களை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, இந்தச் சமூகம் தரக்கூடிய மனஉளைச்சல்களையும் மீறி எனது உலகை தக்கவைத்துக்கொண்டிருப்பதைச் எனது தனித்துவமாகச் சொல்லாலாம். ஆனால் அதுகூட நான் மட்டும்தான் அப்படி இருக்கின்றேன் என்று சொல்லிவிட முடியாது.
சின்னத்திரை அனுபவம்?
பார்;ப்தில்லை. அதிற்சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முடிந்தால் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதை நிறுத்தினால் பெரும் உதவியாக இருக்கும்.ஆபத்தமான பல சின்னத்திரை நாடகங்கள் எமது சமுதாயத்திற்கான சாபம் என்றாலும் அதில் தவறில்லை.
தமிழ்க் கவிஞர்களில் பிடித்தவர்கள்
என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியவர் கவிஞர் பிரமிள் அவர்கள். மனுஷ்யபத்திரனின் “அதீதத்தின் ருசி” கவிதைத் தொகுப்பின் ரசிகை நான். கவிஞர் அனர், புதியமாதவி என்று பட்டியல் போடலாம். இப்போதும் விரும்பிப்படிப்பது கல்கி,ஜெயமோகன், ஜெயகாந்தன், கே டானியல், நாஞ்சில் நாடன், கு.அழகிரிசாமி,மு.மேத்தா,எஸ்.ரா என்று சொல்லிக்கொண்டே செல்லலாம். அனைத்துப் கருத்துக்களோடும் உடன்படமுடியாவிட்டாலும் அப்போதிருந்தே பிடித்த கவிஞன் பாரதி.எந்தப் படைப்பாளி என்பதைத்தாண்டி கிடைக்கும் அனைத்து நூல்களையும் படிக்கும் பழக்கமுண்டு. சில புத்தகங்களுள் நான் மூழ்கிப் போவதுண்டு, சில பத்தகங்கள் படித்த சில பக்கங்களுடனேயே முடிவிடுவதும் உண்டு.
பாடல்களில் பிடித்தவை
என்பதுகளில் வெளிவந்த பாடல்கள் இன்றுவரை எனக்குப் பிடித்தமானவை. அந்த நாட்களில் வந்த இசை மனதில் அமைதிகொள்ளச் செய்கிறது. பாடல்கள் காலம் கடந்து மனதில் நிற்கிறது.எப்போது அந்தப் பாடல்களைக் கேட்டாலும் மனதில் புத்துணர்ச்சி ஏற்ப்படும். இளையராஜாவின் இசையில் அமைதியான பாடல்கள் எனது தேர்வு.
இன்றைய பாடல்களில் பாடலை மிஞ்சிய இசை காணப்படுவது பற்றி
இசையென்பதும், கவிதையென்பதும் இரண்டுமே உணர்வுதான். கவிதைக்கு மெட்டா? இசைக்கு கவிதையா என்பது அல்ல முக்கியமானது. மொத்தமாக அந்தப்படைப்பு எத்தகைய உணர்வினைக் கொடுக்கிறது என்பதே முக்கியம். மெட்டிற்கு எழுதப்படாத வரிகளின் கவித்துவமும், கருத்தும் செழிப்பாயிருக்கும், அதேபோல வரிகளுக்காக போடப்படாத இசையில் உயிர்பிருக்கும். ஆனால் பாடலோ, இசையோ எதுவும் ஒன்றைஒன்று விழுங்கிவிடாதபடி இருப்பது எனக்குப் பிடித்தமானது. ஒரு இசையை ரசிப்பதற்கு, இசை மிஞ்சிவிடாது, வரிகள் தெளிவாயிருப்பது மட்டும் அப்பாடலை இரசனைக்குரியதாக மாற்றாது. அந்த வரிகள் இரசிக்கத்தக்கவையாகவும் இருத்தல் வேண்டும்.
உங்கள் கவிதைகள் வானமா, பூமியா, காற்றா, நீரா?
என்னுடைய கவிதைகள் எல்லாவற்றையும் ஒரு சொல்லுக்குள் அடக்கிடவிடுவதில் விருப்பில்லை. என் கவிதைக்கு மழைநனைதல் பிடிக்கும். வானம் போல விரிந்த தளத்தில் அதனால் பயணிக்க முடியும். குழந்தைகள் என்று வரும்போது பூமியாகவும், எத்தடத்திலும் கால் பதிப்பதில் காற்றாகவும் இருக்கட்டுமே. நெருப்பை விட்டுவிட்டீர்கள். என் கவிதை சுடும்.சுடவேண்டும் என்பதே எனது விருப்பமும்
சினிமா பாடல் எழுதிய அனுபவம்?
செந்தூரனின் இயக்கத்தில் வெளியான சூழ்நிலை திரைப்படத்தில் இரண்டுபாடல்கள் எழுதியிருக்கின்றேன். «ஒற்றை விரலால் ஓவியமாய் நெற்றிமுடிகள் வருடுகிறாய்.. வார்த்தைகள் அற்ற நூலகமாய் நிமிடத்துளிகள் மாற்றுகிறாய்» என்ற எனது முதல் திரையிசைப்பாடல் பம்பாய் ஜெயசிறியின் குரலிலம் தினாவின் இசையிலும் ஒலித்தது மகிழ்ச்சி. அதைத்தொடர்ந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் தெலுங்குப்படம் ஒன்றிற்காக ஒரு பாடல் எழுதிக்கொடுத்திருக்கின்றேன். இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. சில வாய்ப்புகளை நானே மறுத்துவிட்டேன்.எனக்கு பிடித்தமாக இருந்தால் மட்டும் எழுதலாம்.
தொடர்ந்து திரைப்பாடல் எழுத விருப்பமா?
திரைப்படத்திற்கு எழுதுவது ஒரு மாயையைத் தந்திருந்தாலும்,எனது ஆர்வம் இலக்கியப் படைப்புகளிலே அதிகமாக இருக்கின்றது. தமிழ்ச்சினிமாவில் நாம் பெரிதாக எழுதுவதற்கு எதுவுமில்லை. காதல் என்பதே மூலப்பொருள். காதலைப் பாடுதல் தவறில்லை. சமூகச்சீர்கேடுகளை உருவாக்காத தமிழ்ப்பாடல்களை எழுதுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. யாரையும்கொச்சைப்படுத்துவதாகவோ, இளைய தலைமுறையினருக்குத் தேவையற்றவையாகவோ இருக்கும் விதத்தில் எனது பாடல்கள் இருக்கக்கூடாது என்பதில் அக்கறையுண்டு. எப்படியும் எதையும் திரைஇசைப் பாடல்கள் என்ற பெயரில் எழுதலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை அதனால் எந்த வாய்ப்புகளையம் தேடி நான் போவதற்கில்லை. யாராவது கேட்டால் எனக்குப் பிடித்திருந்தால் மட்டும் எழுதிக்கொடுப்பேன்.சுத்தத் தமிழில் எழுதுவது எனது விருப்பம்.நோர்வேயில் வசித்துக்கொண்டு தமிழ்திரையலகிற்குப் பாடல் எழுதுவது சுலபமுமல்ல.சினிமா பாடல் எழுதுவது எனது நோக்கமுமல்ல.
தாமரைக்கு நிகராக உங்களை கவிஞர் அறிவுமதி சொல்லி இருப்பது பற்றி?
கவிஞர் அறிவுமதி அண்ணா என்மீது அன்புமிக்கவர். திரையில் எப்படி மெட்டிற்குப் பாடல் எழுதுவது என்பது பற்றி எல்லாம் சொல்லித்தந்திருக்கின்றார்;. ஆண்கள் மட்டுமே எழுதிவந்த காலத்தில் தமிழ்த்திரையுலகில் முத்திரைபதித்த ஒரு பெண்கவிஞர் தாமரை. பெண்களின் உணர்வை ஒரு பெண் எழுதுவதற்கும் ஆண் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்தியவர். திறமைமிக்க பாடலாசிரியர். என்மேல் உள்ள அன்பில் அறிவுமதி அண்ணா இப்படிக்கூறியிருந்தார். புதிதாய் வரும் ஒருவரை இன்னொருவரோடு ஒப்பிடுவது வழமையான ஒரு விடயம்தான். அதிற் தவறில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். திரையுலகில் பாடல் எழுதும் ஈழத்துப்பெண் நான் என்பதால், இலங்கைத்தமிழ் மொழியின் அழகும் எனது எழுத்தில் கலந்திருக்கும். இப்பொழுது எழுதிய ஒரு பாடலில் இப்படியான சொற்கள் பாவித்திருக்கின்றேன். அதில் எந்தச் சொற்களும் மாற்றப்படாமல் நன்றாக வந்திருப்பதாக இயக்குனர்கள் கூறியது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதைய ஈழத்தில் தமிழ்மக்களிடம் காணப்படும் சமூக்சீரழிவுகள் பற்றி?
எமது சமூகத்தைப்பொறுத்தவரை பெரும் அதிர்ச்சியுட்டும் விடயமாக “சமூகச்சீரழிவு” இருக்கின்றது. போரின் தொடர்ச்சியாக நாம் 50 வருடங்களுக்கு மேல் பொருளாதார வளர்ச்சியிலும் சரி, பாண்பாட்டு வளர்சசியிலும் சரி பின்தங்கயிருக்கின்றோம். உலகமயமாகும் இன்றைய உலகில்,வளர்ந்த சமூகங்கள் படிப்படியாக கண்ட சமூகவளர்ச்சியைஈழத்தழிழ்ச் சமூகம் குறுகிய காலத்திற்குள் அடையவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த அசுரவளர்ச்சி முன்னெடுத்துச் செல்லும் வேகத்தின் அளவை ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதே சமூகச்சீரழி என்ற பெருந்தாக்கம். வெளிநாட்டுப்பணத்துடன் ஒப்பிட்டு வேலைசெய்வதை நஷ்டமாகக் கருதும் ஒரு குறிபிட்ட சமூகம் சுயஉழைப்பில் ஈடுபடாமல் இருப்பதே சமூகச்சீரழிவின் மிகமுக்கியமான ஒன்று. ஆனால் அதைப்பற்றிய அக்கறையைத் தாண்டி முக்கியமாக பெண்களின் பாலுறவு நடவடிக்கைகள்தான் ஊடகங்களிலும், சமூகத்திலும் பெரிதுபடுத்தப்படுகின்றன. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளல், கருத்தரித்தல்,கருஅழித்தல், சிசுக்கொலை போன்ற வெளிப்பாடுகளே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இதிலும் பெண்ணுக்குச் சமமான ஆணின் பங்கு பின்தள்ளப்படுகிறது. உலகமயமாக்கல் முறைமையில் பல ஆண்டுகள் பின்தங்கியிருக்கும் எமது தேசம் கலாச்சார நகர்விலும் தனது வேகத்தை முடுக்கிவிட்டிருப்பதன் தாக்கம்தான் இது. இலங்கையரசு திட்டமிட்டு, தமிழ் முஸ்லீம் சமூகத்தின் மீதுகட்டவிழ்த்துவிட்டிருக்கும் சமூகச்சீரழிவிற்க்குச் சார்பான நடவடிக்கைகளும் தாக்கத்தை இரட்டிப்பாக்கியிருக்கின்றது. “சமூகச்சீரழிவு“குற்றச்சாட்டை நாமும் பிற சமூத்தின்மீது மட்டும் சுமத்தாமல், இந்த மாற்றத்தை அறிவுரீதியில் பகுத்தறிவதே சிறந்தது. ஈழத்தில்; நிகழும் மாற்றங்களுக்கான உண்மைக் காரணங்களை நாம் அறிந்து கொள்வது எம்மை வளர்ச்சியடையச் செய்யும். இது பற்றி கொஞ்சமாய் பேசுவது தப்பான புரிந்துணர்வுக்கு இடமளிக்கலாம் என்பதால் இது பற்றி ஆழமாக இன்னொரு சந்தர்ப்பத்திற் பேசலாம் என்று எண்ணுகின்றேன்.
பிடித்த நாவல், கதை?
சில தினங்களுக்கு முன் “சைனா கெயற்சி”யின் “குழந்தைப்போராளி” என்ற நாவல் படித்தேன். அதன் பிறகு பல நாவல்கள் படித்திருந்தாலும் அந்த நாவல் அளவு என்னை எதுவும் பாதிக்கவில்லை என்றே சொல்லவேண்டும். புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளை விரும்பிப்படிக்pறேன். எஸ்.ராமகிருஷ்னனுடைய கட்டுரைகள் விரும்பிப் படிப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனின் “சிறிது வெளிச்சம்“ குறிபிடத்தக்க நூல். நுட்பமானநகைச்சுவை கொண்ட வைக்கம் முகமது பஷீரின் உலகப்புகழ்பெற்ற மூக்கு சிறுகதைத் தொகுதியை வாசித்தபின் அவருடைய வேறு நூல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.டால்ஸ்டாயின் சிறுகதைகள் பிடிக்கும். இவர்களைத் தவிறவும் சிறந்த நாவல்கள் நிறையவே இருக்கின்றன.
லட்சியம்?
குறைந்த பட்சம் ஒரு சிறந்த நடனக் கலைஞரையாவது எனது நடனக்கலைக்கூடத்தின் முலம் புலம்பெயர்ந்த தேசத்தில் உருவாக்க வேண்டும். பரதக்கலையில் புதிய படைப்புகளுக்கான வழியை கொண்டுவரவேண்டும். சமயம் என்ற வட்டத்தைத் தாண்டி புதிய சிந்தனைகள் புகுத்தபபட்டு உலகளாவிய விடயங்களை பேசவேண்டும் என்ற ஆதங்கம் எனக்குண்டு. ஷேக்பியர், ஹென்றிக் இப்சன் போன்ற பெரும் எழுத்தாளர்களின் படைப்புகளையும் பரதத்தில் நாட்டிய வடிவமாக்க வேண்டும். எனது மகனை மேதையாக்குவதைவிட இந்த சமூகத்தில் ஒரு நல்ல மனிநேயமிக்க மனிதனாக்க வேண்டும். மற்றவர்களை எந்த வகையிலும் பாதிக்காதவாறு,என்னைச் சுற்றியள்ளவர்களை எப்போதும் சந்தோசமாக வைத்து வாழ்க்கையை இறுதிவரை கொண்டு செல்லவேண்டும். பயம் என்ற சொல் மனிதர்களிடம் எனக்கு இல்லை.என்னுடைய நெருங்கிய நண்பர்களினாலேயே பல மனக்வேதனைகளை கடந்து வந்திருக்கிறேன். அனுபவங்கள் கற்றுக் கொடுக்கும் பாடம் ஏறாளம். அதனால் யார் மனதையும் புண்படுத்தாத சொற்கள் செயல்களுடன் பழகவேண்டும். ஆனால் நான் சரி என்று நினைப்பதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற குணமும் எனக்கு முக்கியமாகப்படுகிறது.
உங்களுடைய கவிதைத் தொகுப்புகள் பற்றி.
“பனிப்படலத்தாமரை”“என் ஏதேன் தோட்டம்”“தொட்டிப்பூ” என்ற முன்று கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. தற்போது “கறுத்தபெண் – “நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்“கவிதைத்தொகுப்பு புதுப்புனல் வெளியீடாக வந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து “கருவறைக்கு வெளியே” சிறுகதைத் தொகுப்பு ஒன்று எழுதிமுடித்திருக்கின்றேன். இந்தத் தொகுதியில் வௌ;வேறு சூழலில் எமதுகுழந்தைப்போராளிகளின் வலிநிறைந்த இருண்ட உலகத்தைப் பதிவு செய்ய முயற்சித்திருக்கின்றேன். போராளிக்குழந்தைகள் என்றதும் துப்பாக்கியுடனும் கெரில்லா உடையுடனும் இருக்கும் பதினெட்டுவயதிற்குட்பட்டவர்கள் என்றிருக்கத் தேவையில்லை. நிராயுதபாணியாக குழந்தைப்போராளிகள் பல்வேறு இடங்களில் வேறுவேறு தளங்களில் போரடிக்கொண்டிருக்கின்றனர.; குழந்தைப்போராளிகள் எம்போன்ற வயதுவந்தவர்களினால், அக்கறையற்ற, சலனமற்ற சமூக அமைப்பினால், சீரற்ற குடும்பநிலைகளினால், உறவுகளால், தலைவர்களால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் அனுப்பவித்துக்கொண்டிருக்கும் வேதனைமிகுந்த உலகினை நாம் உணரும் போது ஏற்படும் வலியின் உச்சம்; எதனோடும் ஒப்பிடமுடியாதது.










