கண்ணம்மாவின் காதலர்கள்

ஒற்றைச்சூரியன்
ஒரு நிலவு
ஒரு உலகு
ஒரே காதல்
என்பது பொய்

எங்கள் பார்வைக்கு வந்தது இதொரு சூரியன் தான்
கண்ணுக்குக் காட்டப்படுவது இந்த ஒரு நிலவுதான்
எங்கள் இருப்பைத் தாண்டி எங்கோ  உலகங்கள்  இருக்கலாம்;
ஒரே காதல் என்பது ரகசிய நகரம்

ஒரே காதல் என்பது
மர்மங்கள் புதைந்த கண்ணாடிச் சவப்பெட்டி
உடையாதவரை எந்தப் பேய்களும்
கிளம்புதற்குரிய பீதியில்லை

மனித இனத்தின் யதார்த்தங்களை
இரவுகளில் ஒளித்துவைக்கக் கற்றவர்களின்
நாணயங்கள் கரும்புலிகளின் கண்களைப்போல் ஒளிர்கின்றன

கதவின் பின்புறத்தில் வெளியைத் தேடுபவர்களிடம்
காதல் கணக்கின் விசித்திர ஆய்வாளர்களிடம்
காதல் புனிதமெனும் திறமைமிக்க வழக்கறிஞரிடம்
போய்க் கேளுங்கள்
காதலர்களை ஒளிப்பதன் நவீன தர்மம், நல்லபெண் தத்துவம்
அல்லது
கொடுக்கல் வாங்கல் குடும்ப வியாபாரம்
எனும் கோழைத் தீவிரவாதிகள் வீராப்புடன்
யாருக்காக எதைப் பதுக்குகிறார்கள் என

புதிய நடைமுறைகளும்
புதிய வார்த்தைகளும்
புதிய பழக்கங்களும்
சில மாற்றங்களும்
பிரசவ வலியின் உச்சத்தோடு ஆரம்பிக்கிறது

உங்கள் சுயத்தை இழக்காது
பிரசவஅறையில் அவளுடைய முகத்தை
நிதானத்தோடு எதிர்கொள்ளுங்கள்
அங்கே
இன்னும் சில சூரியன்களை
இன்னும் சில நிலவுகளை
தொலைவில்  இன்னொரு பூமி
என்பவை போல
கண்ணம்மா  தன் காதலர்கள் பற்றிப் பேசப்போகிறாள்

பின்னூட்டமொன்றை இடுக