முன்னோர்களை நினைத்தும், மனிதர்களை இணைத்தும் சரசோதிமாலை கூறும் தீபாவளி

முன்னோர்களை நினைத்தும், மனிதர்களை இணைத்தும்
சரசோதிமாலை கூறும் தீபாவளி

நாளை தீபாவளி. சிலர் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். சிலர் நரகாசுரனைக் கொண்றதை நாங்கள் கொண்டாட மாட்டோம் என்று கொண்டாடுவதில்லை. சிலர் அது தமிழர் பண்டிகையில்லை என்று கொண்டாடுவதில்லை. ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும் அவரவர் தேர்வு. எந்தவொரு கொண்டாட்டமும் மனித உறவுகளை மேம்படுத்தவும் சமூகப் பயனுடையதாகவும் இருக்குமானால் அவை சிறந்தவையே. அதேவேளை எந்தவொரு கொண்டாட்டமும் விமர்சனத்திற்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டவையும் அல்ல. ஆனால் அவை தொடர்பான கட்டுக்கதைகளை விடுத்து, மூலத்தின் உண்மையை ஆதாரத்துடன் அறிந்துகொள்வது அவசியமானது.

நான் சொல்லப்போகின்ற விடயம். தீபவளி கொண்டாடக் கூடியதா இல்லையா என்பது அல்ல. இந்தப் பண்டிகையின் பின்னால் இருக்கும் கதைகள் மற்றும் நம்பிக்கைகள், சான்றுகள் பற்றியது மட்டுமே. அதனால் இதை ‘பெரியாரிய, சோசலிச, இடதுசாரிய, திராவிட’ என்று பேசும் ‘பெரும் சிந்தனையாளர்களுக்கு (ளுழ-உயடடநன Pநசலையசளைவளஇ கநஅinளைவளஇ ளழஉயைடளைவளஇ யனெ டநகவளைவள) இதை நான் சொல்லவில்லை. என்னோடு சமமாகப் பயணிக்கும் மக்களுக்கே இதைப் பேசுகிறேன்.

தீபாவளியைக் கொண்டாடுவதற்கு நரகாசுரன் என்ற அரக்கன் கொல்லப்பட்டதுதான் காரணம் என்பது அனைத்து சமூகத்திலும் நிலவி வரும் நம்பிக்கை. எனக்கும் சிறுவயதில் இருந்து இந்தக்கதைதான் தெரியும். என்னைச் சுற்றியிருப்பவர்கள் இந்தக் கொண்டாட்டம் தமிழர்களை அவமதிக்கிறது. எங்களுக்கான கொண்டாட்டம் இதுவல்ல என்ற வாதங்களை வைப்பதைக் கேட்டிருக்கிறேன்.

இத்தனை காலமாக சொல்லாப்பட்டுவரும் நரகாசுரன் வதக் கதைக்கு எழுத்து வடிவம் இருக்கிறதா என்ற பார்க்க வேண்டி இருக்கிறது அல்லவா. யாரோ ஒருவர் சொன்ன வாய்மொழிகளை நம்பி ஒரு பண்டிகையை நாம் முன்னெடுப்பதும், தவிர்ப்பதும் எத்தனை அபத்தமானது. அதனால் இந்தக் கதை எங்கிருக்கிறது என்று பார்த்தால், பாகவத புராணம், பத்தாம் ஸ்கந்தத்தில் அந்தக் கதை விவரிக்கப்படுகிறது. அதில் கிருஷ்ணனாகிய ஹரி சக்கரத்தால் நரகாசுரனின் தலையை அறுத்ததாகக் கூறப்படுகிறது. விஷ்ணு புராணத்திலும் நரகாசுரன் வதம் இடம்பெறுகிறது. ஆனால் அந்தக்கதை ஒரு கதையாக இருக்கிறதே தவிர எந்த இடத்திலும் தீபாவளியுடன் இணைத்தோ, தீபாவளிப் பண்டிகைக்கான கதையாகவோ குறிப்பிடவில்லை. இந்த நாளை ஆண்டுதோறும் தீபாவளியாகக் கொண்டாட வேண்டும்” என்ற அறிவுறுத்தலும் அவற்றில் இல்லை என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியமானது.

யாரோ சிலர் நரகாசுரன் கதையை தீபாவளிப் பண்ணடிகையுடன் இணைத்த வாய்மொழி அரசியலை நாமும் ஏற்றுக்கொண்டிருப்பது எமது அறியாமையையே காட்டும்.

அப்போ எழுத்து இலக்கியச் சான்றுகள் ஏதும் தீபாவளி பற்றி இல்லையா என்றும் பார்க்க வேண்டும்.

அப்படி தேடிய பொழுது ஒரு ஆசிரியர் எனக்கு சரசோதிமாலை என்ற நூலை அறிமுகப்படுத்தினார். சரசோதிமாலை நூல் தீபாவளி பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அந்தக் குறிப்பு எதிலும் நரகாசுரவதம் இடம்பெறவில்லை.

சரசோதிமாலை என்ற நூல் இலங்கையில் போசராசபண்டிதர் இயற்றிய ஒரு தமிழ் நூல். இலங்கையில் தம்பைமாநகரத்தில் பராக்கிரமபாகு மகாராசன் வேண்டுகோளின்படி கி.பி. 1310-இல் இயற்றப்பட்டு, அரசவையில் அரங்கேற்றப்பட்டதாக நூல் குறிப்பிடுகிறது. அக்காலச் சமூகத்தின் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் அறிய இந்நூல் உதவுகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட பதிப்பு, “சரசோதிமாலை எனும் காலக்கணிதம் கி.பி. 1310” என்ற தலைப்பில் கிடைக்கிறது. எனவே, தீபாவளியைப் பற்றிப் பேசும்போது, இலங்கைத் தமிழ் நூல் மரபில் கிடைக்கும் இந்தப் பழைய எழுத்துச் சான்றுக்கு உரிய இடத்தை வழங்குவது அவசியம்.

இந்நூலின் தெய்வவிரதப்படலத்தில், “தீபாவலி” என்ற தலைப்பில் ஒரு பாடல் வருகிறது. அப்பாடல் தீபாவலி அன்று செய்ய வேண்டிய செயல்களையும், முன்னோர்களையும் நினைவுகூரும் ஒரு நாளாக அறிவிக்கிறது. எண்ணெய் பூசி வெந்நீரில் குளித்து, முன்னோர்கள் மகிழ, மகிழ்ச்சியுடன் நல்ல தருமங்களைச் (காரியங்களைச்) செய்யுமாறு சொல்கிறது. இதுதான் எழுத்து வடிவில் தீபாவளி பற்றிக் கிடைத்திருக்கும் நூல். இதைவிட வேறு ஒரு நூல் இருப்பின் எனக்கும் சான்றோடு அறியத்தர வேண்டுகிறேன்.

இந்தப் பாடல் மூன்று விடயங்களை முன்வைக்கின்றது: முன்னோர்களை மகிழ்வித்தல், நீராடலின் வழியாக அந்நாளை வரவேற்பது, பிறருக்கு நன்மை செய்வது. இவற்றை மையமாக வைத்தே இன்று ஒரு பொருளுள்ள தீபாவளியைக் கொண்டாட முடியும்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தி, பாடலில் நரகாசுரனின் பெயர் இடம்பெறவில்லை என்பதுதான். கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதால் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்று அது கூறவில்லை. அந்த மரணத்தை நினைவுகூர்வதையே விழாவின் நோக்கமாகவும் முன்வைக்கவில்லை.

முன்னோர்களை மகிழ்விப்பது என்பது அவர்களுக்கு விளக்கேற்றுவது என்று குறுக்கிவிடாது. அவர்கள் சந்தித்த துன்பங்களையும், உழைப்பையும், நமக்காகச் செய்த போராட்டங்களையும், தியாகங்களையும் அடுத்த தலைமுறையுடன் பகிரும் நாளாகவும் அமையலாம். கூட்டுநினைவுகூர்தலைப் பிரதிபலிக்கின்றது எனவும் கொள்ளலாம். போரும் இழப்புகளும் நிறைந்த வரலாற்றைக் கொண்ட இலங்கைத் தமிழர்களுக்கு, முன்னோர் நினைவுகளைப் பாதுகாக்கும் நாளுக்குரிய முன்னுதாரணமாகக்கூட தீபாவளி பற்றிய சரசோதிமாலைக் குறிப்பபுகளைக் கொள்ளலாம். அது பொருளுள்ளதாகவும் இருக்கும். இது பாடலில் உள்ள முன்னோர் தொடர்பை இன்றைய வாழ்வில் விரிவுபடுத்திப் பார்க்கும் ஒரு வழியாகக் கொள்ளலாம்.

பாடல் கூறும் தருமத்தையும் சமூகப் பொறுப்பாக வளர்த்தெடுக்கலாம். ஒரு குடும்பத்துக்கு உணவு வழங்குவது, ஒரு குழந்தையின் கல்விக்குப் பங்களிப்பது, தனிமையில் வாழும் முதியவரைச் சந்திப்பது, நோயுற்றவருக்கு உதவுவது போன்ற செயல்களைத் தீபாவளியின் ஒரு பகுதியாக்கலாம். இவை ஒவ்வொன்றையும் நூல் குறிப்பிட்டுச் சொல்லவில்லை; “நற்கருமம்” என்ற அதன் அறிவுறுத்தலை இன்றைய தேவைகளுக்கேற்ப நடைமுறைப்படுத்துவது, பொருளுணர்வது அவரவர் தேர்வு.

பெரும்போக்காகக் கொண்டாடப்படும் இன்றைய தீபாவளி என்பது பெரும் வணிக நலன்களை முன்னிறுத்திய நிகழ்வாக ஆக்கப்பட்டிருக்கின்றது. பண்டிகை என்பது புதிய ஆடைகள் அணிவதற்கும் இனிப்புகள் உண்பதற்கும் மட்டுமல்ல, மற்றவர்களுடைய தேவைகளை நினைப்பதற்குமான நாள் என்பதை சரசோதிமாலை நூல் ஊடாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல முடியும்.

இத்தகைய அணுகுமுறை விழாவை ஒரு சான்றற்ற கதைக்காக விட்டுக்கொடுக்காமல், அதன் பொருளை அறிந்து, நமக்குப் பொருத்தமான அறநெறிகளுடன் தொடர்வதாகும்.

விழாக்களின் பின்னணியைப் பேசுபவர்களுக்கு ஆதாரங்களைப் பற்றிய பொறுப்புணர்வு தேவை. “எந்த நூல்? எந்தப் பகுதி? எந்தச் செய்யுள்?” என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தெரிய வேண்டும். மூலப்பாடலில் இல்லாத ஒரு செய்தியை அதில் இருப்பதாகச் சொல்வதும், ஒரு கதையை விழாவின் முழு வரலாறாக முன்வைப்பதும் மக்களிடம் தவறான புரிதலை உருவாக்கும். ஆதாரமற்ற கூற்றுகள் பக்தியின் பெயரில் வந்தாலும், மரபை மறுக்கும் பெயரில் வந்தாலும் அவற்றைச் சரிபார்க்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு நேர்மையான முறையில் பண்டிகை பற்றிக் கூறி அவர்களை சிந்திக்க வைக்க சரசோதிமாலை நமக்கு வாய்ப்பளிக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்